கேமரா கண்களில் சிக்கிய டீசல் நானோ: மாற்றங்களுடன் வருகிறது
நானோவை காப்பாற்ற டாடாவுக்கு இப்போது இருக்கும் ஒரே வழியும், நம்பிக்கையும் டீசல் மாடல்தான். எனவே, தற்போது தீவிரமாக டீசல் நானோவை சோதனை செய்து வருகிறது டாடா. அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கும் டீசல் நானோ மார்க்கெட்டில் இருக்கும் டீசல் கார்களிலேயே அதிக மைலேஜ் தரும் மாடலாக இருக்கக்கூடும் என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஒட்டுமொத்தத்தில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி என வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு ஏற்ற எரிபொருள் மாடல்களில் கிடைக்கும் வாய்ப்பை பெற உள்ளது. இந்த நிலையில், சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட டீசல் நானோ காரின் படங்களை ரஷ்லேன் இணையதளம் வெளியிட்டிருக்கிறது. பல புதிய மாற்றங்களுடன் வரும் டீசல் நானோவின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

வெளிப்புறம்
முன்பக்க, பின்பக்க பம்பர்களின் டிசைன் மாற்றப்பட்டிருக்கிறது. இடதுபக்க ரியர் வியூ கண்ணாடி இல்லை. ஆனால், பெரிய அளவில் வெளிப்புறத்தில் மாற்றங்கள் தெரியவில்லை.

டீசல் எஞ்சின்
3 சிலிண்டர் கொண்ட 800சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 48 பிஎஸ் பவரை அளிக்கும் சக்தி கொண்டதாக இருக்கும்.

மைலேஜ்
ஹோண்டா அமேஸ் கார்தான் தற்போது மார்க்கெட்டில் அதிக மைலேஜ்( 25.8கிமீ/லி ) தரும் டீசல் காராக இருக்கிறது. ஆனால், டீசல் நானோ லிட்டருக்கு 30 கிமீ.,க்கும் மேல் மைலேஜ் தரும் என்று கூறப்பவதால் இந்தியாவின் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட கார் என்ற பெருமையை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய மாடல்
அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் டீசல் நானோ 2013 மாடலைவிட கூடுதல் குரோம் பூச்சு வேலைப்பாடுகள் மற்றும் வடிவமைப்பில் மாற்றங்களுடன் புதிய மாடலாக இருக்கும்.

காத்திருக்கும் சவால்
நாட்டின் ஜாம்பவான் கார் நிறுவனமான மாருதியும் புத்தம் புதிய 800சிசி டீசல் எஞ்சினுடன் ஒய்எல்7 என்ற குறியீட்டுப் பெயரில் புதிய காரை அறிமுகம் செய்ய உள்ளது. எனவே, டீசல் நானோ காரும், மாருதியின் புதிய டீசல் காரும் நேரடியாக களம் காணும் வாய்ப்பு இருக்கிறது. டாடாவின் புதிய நம்பிக்கையான டீசல் நானோ மாருதியின் புதிய டீசல் காரை எதிர்கொண்டு வெற்றியை ருசிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








