அடுத்த 3 ஆண்டுகளில் வரும் புதிய ஃபியட் கார்களின் பட்டியல்
இந்திய கார் மார்க்கெட்டின் ஸ்திரத்தன்மையை மிக தாமதமாக புரிந்துகொண்டு தீவிர செயல்பாடுகளை துவக்கியுள்ளது ஃபியட். இப்போதுள்ள சூழ்நிலையில் மாதத்திற்கு சராசரியாக 1,000 கார்கள் விற்பனை என்பது மிக மிக குறைவு. எனவே, மிக தீவிரமாக டீலர்ஷிப்புகளை நியமித்து வரும் அந்த நிறுவனம் மிக வலுவாக இந்திய மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பெற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
டீலர்கள் எண்ணிக்கை 100ஐ எட்டியவுடன் பல புதிய மாடல்களை வரிசை கட்ட ஃபியட் திட்டமிட்டுள்ளது. அதில், அந்த நிறுவனத்தின் அபார்த் பிராண்டு மற்றும் அமெரிக்காவின் ஜீப் பிராண்டு எஸ்யூவி மாடல்களும் அடக்கம். அடுத்த 3 ஆண்டுகளில் ஃபியட் அறிமுகம் செய்ய இருக்கும் கார் மாடல்கள் மற்றும் அவற்றை பற்றிய முக்கிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஃபியட் லீனியா கிளாசிக்
கடந்த சில தினங்களுக்கு முன் ஃபியட் விற்பனைக்கு கொண்டு வந்த லீனியா கிளாசிக் என்ற குறைந்த விலை மிட்சைஸ் செடானும் பட்டியலில் இருந்த மாடல். என்ட்ரி லெவல் செடான் மார்க்கெட்டில் ஓர் முழுமையான செடான் காராக ஃபியட் லீனியா கிளாசிக் வந்துள்ளது. இது நிச்சயம் போட்டியாளர்களுக்கு நெருக்கடியை தரலாம். ஃபியட்டின் முதல் அதிரடியாக இது கூறப்படுகிறது.

ஜீப் ரேங்லர்
இந்த ஆண்டு இறுதியில் ஜீப் பிராண்டில் ரேங்கல் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வருகிறது. மிகச்சிறந்த ஆஃப்ரோடரான இந்த புதிய மாடல் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். ரூ.30 லட்சத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது தீவிர சோதனையில் இருக்கிறது.

லீனியா ஃபேஸ்லிப்ட்
அடுத்த ஆண்டு லீனியாவின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த லீனியா கார் புதிய 1.6 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினுடன் வர உள்ளது. இப்போது தீவிர சோதனையில் இருக்கும் இந்த புதிய கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்படும் என்று தெரிகிறது.

ஜீப் கிராண்ட் செரோக்கீ
சொகுசும், ஆஃப்ரோடு அம்சங்களும் ஒருங்கே பெற்ற ஜீப் பிராண்டின் செரோக்கீ எஸ்யூவி கடந்த ஆண்டு இறுதி முதல் இந்திய மண்ணில் வைத்து சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஜீப் பிராண்டு சொகுசு எஸ்யூவியும் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். டீசல் எஞ்சின் ஆட்டோமேட்டிக் மாடலில் வர உள்ளது. ரூ.45 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.

ஃபியட் புன்ட்டோ அபார்த்
அடுத்த ஆண்டு அறிமுக பட்டியலில் இருக்கும் முக்கிய மாடல். 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்துடன் வருகிறது. இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் 150 பிஎச்பி ஆற்றலையும் வெளிப்படுத்துவதாக இருக்கும் என்பதே இந்த ஹேட்ச்பேக்கின் ஸ்பெஷாலிட்டி. மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கும்.

புன்ட்டோ ஃபேஸ்லிப்ட்
அடுத்த ஆண்டு மேம்படுத்தப்பட்ட புன்ட்டோ கார் மாடலை ஃபியட் அறிமுகம் செய்ய உள்ளது. இங்கிலாந்தில் விற்பனை செய்யப்படும் புதிய புன்ட்டோவில் இடம்பெற்றிருக்கும் அதே அம்சங்கள் இந்த காரிலும் இடம்பெற்றிருக்கும். 90 பிஎச்பி ஆற்றல் கொண்ட விஜிடி மல்டிஜெட் டீசல் எஞ்சினுடன் வருகை தர உள்ளது.

ஃபியட்டுக்கு முக்கிய ஆண்டு
2015ம் ஆண்டு ஃபியட் நிறுவனத்துக்கு மிக முக்கியமான வருடமாக இருக்கும். ஜீப் பிராண்டில் காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதோடு, தனது சொந்த பிராண்டில் புதிய காம்பெக்ட் எஸ்யூவியையும் அறிமுகம் செய்ய உள்ளது ஃபியட்.

ஜீப் பி எஸ்யூவி
இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட இருக்கும் முதலாவது ஜீப் பிராண்டு எஸ்யூவியாக ஜீப் பி குறிப்பிடப்படுகிறது. ஃபியட்டின் பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் இந்த எஸ்யூவியில் பயன்படுத்தப்படும். ரெனோ டஸ்ட்டரை குறிவைத்து இந்த எஸ்யூவி வர இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன், ஜீப் பிராண்டின் சிறப்பம்சங்களை தாங்கி வர உள்ளது.

ஃபியட் காம்பெக்ட் எஸ்யூவி
ஃபியட் 500 எக்ஸ் காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு ஃபியட் பிராண்டில் வெளிவர இருக்கும் புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடல். ஜீப் பிராண்டின் பி எஸ்யூவி மாடலின் பல அம்சங்கள் இந்த காம்பெக்ட் எஸ்யூவியிலும் இடம்பெறும். இதுவும், ஈக்கோஸ்போர்ட், டஸ்ட்டருக்கு போட்டியாக இருக்கும்.

ஜீப் சி எஸ்யூவி
இந்த புதிய மாடல் குறித்து அதிக தகவல்கள் இல்லை. டாடா சஃபாரி ஸ்ட்ராம், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி 500 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. ஃபியட்டின் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் இந்த எஸ்யூவியிலும் பயன்படுத்தப்படும்.

எழுச்சி பெறுமா?
2016ம் ஆண்டில் புதிய கார் மாடல்களுடன் முழு வீச்சில் ஃபியட் வர்த்தகம் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2016ம் ஆண்டில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் டீலர் கட்டமைப்பு ஸ்திரமாகிவிடும் என்பதால் பெரிய வர்த்தக கனவுடன் முதலீடுகளை செய்து வருகிறது ஃபியட்.


Click it and Unblock the Notifications








