வாடிக்கையாளர் ஈக்கோஸ்போர்ட்டை ஒதுக்க காரணங்கள்!!
விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது முதல் மீடியாவின் டார்லிங்காக விளங்கி வருகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட். புரட்சிகரமான ஈக்கோபூஸ்ட் எஞ்சின், ஸ்டைலான வடிவம், எதிர்பாராத விலை என முத்தாய்ப்பான அம்சங்களுடன் மார்க்கெட்டுக்கு வந்த ஈக்கோஸ்போர்ட் முன்பதிவிலும் புரட்சி செய்தது அறிந்ததே.
ஆனால், இப்போது ஈக்கோஸ்போர்ட்டை முன்பதிவு செய்ய நினைக்கும் வாடிக்கையாளர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதற்கான, முக்கிய காரணங்களை ஸ்லைடரில் காணலாம்.

காத்திருப்பு காலம்
பெரும் கால தாமதத்திற்கு பின்னரே ஈக்கோஸ்போர்ட் மார்க்கெட்டுக்கு வந்தது. எனவே, முன்கூட்டியே உற்பத்தியை துவங்கி போதுமான கையிருப்பை ஃபோர்டு வைத்திருக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால், முன்பதிவு துவங்கிய ஒரு மாதத்திற்குள் ஈக்கோஸ்போர்ட் முன்பதிவு 6 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரை எட்டிவிட்டது. நீண்ட காத்திருப்பு தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஃபோர்டு மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் வேறு மாடல்கள் பக்கம் சாயும் நிலையை ஏற்படுத்திவிட்டது.

விலை உயர்வு
வாடிக்கையாளர்களை ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கவர்வதற்கு மிக முக்கிய காரணம் விலைதான். ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையான விலையில் வந்ததும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த நிலையில், சமீபத்தில் ஈக்கோஸ்போர்ட்டின் விலையை வேரியண்ட்டுக்கு தகுந்தவாறு ரூ.38,000 வரை உயர்த்தியது ஃபோர்டு.

முன்பதிவுதாரர்களுக்கு அதிர்ச்சி
புதிதாக முன்பதிவு செய்ய இருப்பவர்களுக்கு வேண்டுமானால் இது சற்று அதிர்ச்சியை தந்தாலும் பாதிப்பு கிடையாது. ஆனால், கடந்த இரு மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கும் இந்த விலை உயர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஃபோர்டு தெரிவித்துள்ளது அவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, ரெனோ மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் விலை உயர்வை அறிவித்தபோது, கார்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தாது என்று அறிவித்தது நினைவிருக்கலாம்.

பேஸ் மாடல் இல்லை
ரூ.5.69 லட்சம் ஆரம்ப விலையில் பேஸ் பெட்ரோல் மாடல் வந்தது பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், டீலர்களில் இந்த பேஸ் மாடலை முன்பதிவு செய்வதை தவிர்ப்பதோடு, கூடுதல் அம்சங்கள் நிறைந்த மிட் அல்லது டாப் வேரியண்ட்டுகளை முன்பதிவு செய்யுமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர். மேலும், இந்த பேஸ் மாடலுக்கான காத்திருப்பு காலமும், டெலிவிரியிலும் தேவையற்ற தாமதத்தை ஃபோர்டு செய்து வருவாதகவும் வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவிக்கினறனர். கவர்ச்சிகரமான குறைந்த விலை கொண்ட காராக ஈக்கோஸ்போர்ட்டை காட்டுவதற்காகவே இந்த பேஸ் மாடலை ஃபோர்டு அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வசதிகள் குறைப்பு
கடந்த வாரம் டைட்டானியம் வேரியண்ட்டிலிருந்து புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் கீ லெஸ் என்ட்ரி வசதிகளை நீக்கியுள்ளது ஃபோர்டு. டைட்டானியம் மற்றும் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டுகளுக்கு இடையில் போதிய வித்தியாசம் இருக்கும் வகையில் இந்த வசதிகள் குறைப்பு செய்யப்பட்டதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது. விலையை உயர்த்திய கையோடு, இந்த வசதிகளையும் ஃபோர்டு பிடுங்கியுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

டீலர்களின் அராஜகம்
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கான வரவேற்பை பார்த்து திகைப்படைந்த ஃபோர்டு டீலர்கள் பலர் இதுதான் சமயம் என்று வாடிக்கையாளர்களிடம் கூடுதல் ஆக்சஸெரீஸ்களையும், குறிப்பிட்ட நிறுவன காப்பீட்டை வாங்குமாறும் கட்டாயப்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

வாடிக்கையாளர் வெறுப்பு
ஓர் ஆண்டு வரை நீளும் காத்திருப்பு காலம், விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் தற்போது ஈக்கோஸ்போர்ட் ரசிகர்கள் வேறு கார் நிறுவனங்களுக்கு நகரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், டஸ்ட்டருக்கு குறைந்த காத்திருப்பு காலம் இருப்பதும், பல கார் நிறுவனங்கள் ஏராளமான தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளதும் ஈக்கோஸ்போர்ட் மீதான ஈர்ப்பை குறைத்துள்ளன.


Click it and Unblock the Notifications








