அடுத்த ஆண்டு வருகிறது மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபியஸ்ட்டா
அடுத்த ஆண்டு துவக்கத்தில் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபியஸ்ட்டா கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அஸ்டன் மார்ட்டின் காரை நினைவூட்டும் முகப்பு கிரில் கொண்டதாக இருக்கும் இந்த புதிய ஃபியஸ்ட்டா கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போதைய மாடலைவிட முகப்பு மிக கம்பீரமாக இருக்கும் இந்த கார் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த கார் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈக்கோபூஸ்ட் இல்லை
ஈக்கோஸ்போர்ட்டில் பொருத்தப்பட்டிருக்கும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சினுடன் வரும் என முதலில் தகவல்கள் தெரிவித்தன. ஏற்கனவே விலை அதிகம் கொண்ட காராக பெயரெடுத்து விற்பனையில் சோபிக்க தவறிய இந்த காரில் ஈக்கோபூஸ்ட் எஞ்சினை தவிர்ப்பதே மேல் என ஃபோர்டு முடிவு செய்துள்ளது.

முகப்பு
மேம்படுத்தப்பட்ட ஃபியஸ்ட்டாவின் பெரிய மாற்றமாக முகப்பு கிரில்லை கூறலாம். அஸ்டன் மார்ட்டின் கார்களின் முகப்பு கிரில்லை போன்றே இருக்கும் அறுகோண வடிவ கிரில் இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கிறது. பானட்டும் உயர்த்தப்பட்டிருப்பதுடன், ஹெட்லைட், பனி விளக்குகள் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கிறது.

இன்டிரியர்
இன்டிரியரிலும் சில மாற்றங்களை கண்டிருக்கிறது ஃபியஸ்ட்டா. பிரேசிலில் விற்பனையில் இருக்கும் இந்த செடான் காரில் பியானோ பிளாக் இன்டிரியர் பினிஷிங்குடன் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய அலாய் வீல்
காரின் அழகை கூட்டும் வகையில், புதிய டிசைனுடன் கூடிய அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

எஞ்சின்
இப்போது விற்பனையில் இருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களுடன் வரும்.

இந்தியர்களுக்கு தரிசனம்
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கார் இந்தியர்களுக்கு முதல் தரிசனத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








