இந்தியாவில் கைகோர்த்து உலா வந்த கிராண்ட் செரோக்கீ கார்கள்!!
இந்தியாவில் ஜீப் பிராண்டில் செரோக்கீ மற்றும் ரேங்லர் எஸ்யூவி மாடல்களை விரைவில் ஃபியட் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கிராண்ட் செரோக்கீ தற்போது இந்திய மண்ணில் வைத்து தீவிரமாக டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது.
முதலில் 2013ம் ஆண்டு மாடல் கிராண்ட் செரோக்கீ சோதனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கிராண்ட் செரோக்கீ காரும் இந்தியாவில் தற்போது சோதனை செய்யப்படுகிறது.
2013 மாடல் மற்றும் 2014 மாடல் ஆகிய இரண்டு கிராண்ட் செரோக்கீ கார்களும் சமீபத்தில் சேர்த்து சோதனை செய்யப்பட்டு வரும் படங்களை ரஷ்லேன் இணையதளம் வெளியிட்டு இருக்கிறது. பெயருக்கு ஏற்றாற்போல் ரொம்ப கிராண்டான டிசைனுடன் சாலையில் சீறிச் சென்ற கிராண்ட் செரோக்கீ கார்களின் சோதனை ஓட்ட படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

அறிமுகம்
தீபாவளிக்கு முன்னதாக அக்டோபரில் இந்த ஜீப் செரோக்கீ மற்றும் ரேங்லர் எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் ஃபியட் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழப்பம்
இரு மாடல்களும் சோதனையில் இருப்பதால் சிறிய குழப்பம் இருக்கிறது. முதலில் 2013 மாடலையும், அடுத்த ஆண்டு 2014 மாடல் கிராண்ட் செரோக்கீயையும் விற்பனைக்கு கொண்டு வர ஃபியட் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

வேரியண்ட்டுகள்
2014 மாடல் கிராண்ட் செரோக்கீ லரிடோ, லரிடோ இ, லிமிடேட், ஓவர்லேண்ட், ஓவர்லேண்ட சம்மிட் மற்றும் எஸ்ஆர்டி8 ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் சோதனையில் இருக்கும் வேரியண்ட் ஓவர்லேண்ட் சம்மிட் என்பதும் தெரிய வந்துள்ளது.

2014 செரோக்கீ சூப்பர்
2013 மாடலைவிட 2014 மாடல் செரோக்கீயின் முகப்பு மிக வசீகரமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஹெட்லைட், முன்பக்க கிரில், பம்பர் ஆகிய அனைத்தும் மிக நேர்த்தியாக மாற்றப்பட்டுள்ளன.

எஞ்சின்
243 பிஎஸ் பவரையும், 569 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். பேடில் ஷிப்ட்டுடன் கூடிய 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது.

விலை
ரூ.45 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலான விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வர இருக்கிறது.

சொகுசு கார்களுக்கு கிலி
மிக பிரம்மாண்டமாகவும், சிறந்த தொழில்நுட்ப வசதிகள் கொண்ட கிராண்ட் செரோக்கீ பல சொகுசு பிராண்டுகளின் எஸ்யூவி மாடல்களின் மார்க்கெட்டை கலகலக்க வைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








