கனரக வாகனங்களுக்கு ஏபிஎஸ் பிரேக் கட்டாயம்: மத்திய அரசு பரிசீலனை

உலக அளவில் மோசமான சாலை விபத்துக்கள் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. 2010ம் ஆண்டில் 1.35 லட்சம் பேரும், 2011ம் ஆண்டில் 1.42 லட்சம் பேரும் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கனரக வாகனங்களாலும் ஏற்படும் விபத்துக்களில் உயிரிழப்பு ஏற்படுவது அதிகமாக உள்ளது. எனவே, சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கார்களில் வழங்கப்படும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என்ற புதிய தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பத்தை பஸ், டிரக் உள்ளிட்ட கனரக வாகனங்களில் கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
5 டன் எடைக்கும் அதிகமான பஸ்களிலும், 12 டன்னுக்கும் கூடுதல் எடை சுமக்கும் திறன் கொண்ட டிரக்குகளிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என மத்திய சாலை போக்குவரத்து துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது வால்வோ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் பஸ்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கிடைக்கிறது.
ஆனால், அனைத்து நிறுவனங்களும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் விற்பனை செய்வதை கட்டாயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். இதன்மூலம், சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








