இந்தோனேஷியாவில் ஹோண்டா எம்பிவி காருக்கு 4,500 பேர் முன்பதிவு
இந்தோனேஷிய மார்க்கெட்டில் வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹோண்டா மொபிலியோ எம்பிவி காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுவரை 4,500 பேர் இந்த புதிய காருக்கு முன்பதிவு செய்துள்ளனர். இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய எம்பிவி மாருதி எர்டிகாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

அறிமுகம்
கடந்த மாதம் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த புதிய எம்பிவி கார் முதல்முறையாக பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டது.

உற்பத்தி
வரும் ஜனவரி மாதம் முதல் இந்தோனேஷியாவின் கரவாங் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஹோண்டாவின் புதிய ஆலையில் இந்த புதிய எம்பிவி கார் உற்பத்தி துவங்க உள்ளது.

முன்பதிவு
ஜனவரி மாதம் உற்பத்தி துவங்க இருந்தாலும், அங்கு மொபிலியோவுக்கு முன்பதிவு துவங்கியது ஹோண்டா. இதுவரை 4,500 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. வரும் பிப்ரவரி முதல் இந்தோனேஷியாவில் டெலிவிரி துவங்கப்பட உள்ளது.

பெட்ரோல் மட்டும்
இந்தோனேஷியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. ஆனால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்போது 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் மாடல் அதிக மைலேஜ் தரும் வகையில் இருக்கும் என்பதால் இந்தியாவிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கிறது.

இந்திய பிரவேசம்
இந்தோனேஷியாவில் பெற்றுள்ள வரவேற்பால் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹோண்டா மொபிலியோ குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய எம்பிவியை ஹோண்டா அறிமுகம் செய்ய உள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு மத்தியில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எர்டிகாவுக்கு நெருக்கடி
மாருதி டிசையரை குறி வைத்து அமேஸ் நிலைநிறுத்தப்பட்டது போன்று, மாருதி எர்டிகாவை குறி வைத்து மொபிலியோவை ஹோண்டா நிலைநிறுத்த உள்ளது. எனவே, எம்பிவி கார் மார்க்கெட்டில் கடும் போட்டி ஏற்படும் என்று கருதப்படுகிறது.

விலை
இந்தோனேஷியாவில் 150 மில்லியன் முதல் 180 மில்லியன் ருபியாவில் விற்பனைக்கு வர உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.8.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் விலை கொண்டதாக அங்கு விற்பனை செய்யப்பட உள்ளது. ஆனால், இந்தியாவில் ரூ.6.5 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான விலை பட்டியலில் வரும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








