ஆல்ட்டோவுக்கு போட்டியாக குட்டிக் காரை களமிறக்கும் ஹோண்டா!
ஆல்ட்டோ, இயானுக்கு போட்டியாக புதிய குட்டிக் காரை அறிமுகப்படுத்த ஹோண்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹோண்டா புதிய குட்டிக் காரை அறிமுகப்படுத்த இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அதனை உறுதிப்படுத்தும் விதமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விற்பனை வளர்ச்சியை எட்டும் விதத்தில் புத்தம் புதிய குட்டிக் காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது. பிரியோவுக்கு கீழே புதிய குட்டிக் காரை நிலைநிறுத்தவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

புதிய கார் திட்டம்
கடந்த மாதம் டெல்லியில் நடந்த ஹோண்டா நிறுவனத்தின் சர்வதேச தலைவர் பியூமிஹிகோ இகே மற்றும் தலைமை அதிகாரி தகனோபு இட்டோ முன்னிலையில் நடந்த உயர் மட்டக் கூட்டத்தில் இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறியீட்டு பெயர்
World- A என்ற பெயரில் புதிய குட்டிக் கார் தயாராகி வருகிறது. இந்த கார் மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான் ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும்.

உற்பத்தி நெருக்கடி
கிரேட்டர் நொய்டா மற்றும் ராஜஸ்தானில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஆலைகளில் புதிய காரை உற்பத்தி செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே, மூன்றாவதாக புதிய ஆலை அமைக்கவும், அதில் சிறிய காரை தயாரிக்கவும் ஹோண்டா முடிவு செய்துள்ளது.

புதிய ஆலை
புதிய ஆலையில் இந்த சின்ன கார் உற்பத்தி செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய ஆலைக்கான பட்டியலில் குஜராத் மாநிலத்தின் கார் தயாரிப்பு கேந்திரமாக திகழும் சனந்த் தொழிற்பேட்டைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாம்.

எஞ்சின்
புதிய குட்டிக் காரில் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த எஞ்சின் லிட்டருக்கு 25 கிமீ., மைலேஜ் தரும் வகையில் இருக்கும் என்கிறது ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள்.

விலை
பிரியோவுக்கு கீழே நிலைநிறுத்தப்பட இருக்கும் புதிய கார் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சத்திற்குள் விலை கொண்டதாக இருக்கும். இந்த காரை இந்தியாவிலிருந்து குறிப்பிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
குறிப்பு: ஹோண்டா என் பாக்ஸ் படங்கள் மாதிரிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








