அடுத்து சொகுசு கார் மார்க்கெட் மீது கண் வைத்த ஹூண்டாய்!
இந்தியாவில் சொகுசு செடான் கார்களை அறிமுகம் செய்வது குறித்து ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
சிறிய கார்களை வைத்து இந்திய மார்க்கெட்டில் நுழைந்த ஹூண்டாய் தற்போது இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக விளங்குகிறது.

மேலும், சிறந்த தயாரிப்புகளை வழங்கி வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. இந்த நிலையில், தனது சொகுசு கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து அந்த நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
ஈக்குவஸ் செடான் காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்வதற்கான சாதக, பாதகங்களை அந்த நிறுவனம் தற்போது ஆராய்ந்து வருகிறது. தவிர, ஜெனிசிஸ் சொகுசு காரும் ஹூண்டாயின் திட்டத்தில் இருக்கிறது.
இதுகுறித்து ஹூண்டாய் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது," சொகுசு கார் மார்க்கெட்டில் இறங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஆனால், இன்னும் இதுகுறித்து முடிவு எடுக்கவில்லை.
ஈக்கஸ் தவிர இதர சொகுசு கார்களும் எங்களிடம் உள்ளது. மேலும், சொகுசு கார்களை பிரத்யேக ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
வாடிக்கையாளர்கள் எங்களது சொகுசு கார்களை ஏற்று கொள்வார்களா என்பது குறித்த ஆய்வு செய்த பின்னரே இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








