இந்திய வம்சாவளி விஞ்ஞானி வடிவமைத்த டிரைவரில்லா கார்!!
பல்வேறு நாடுகளில் தானியங்கி கார்களை சாலையில் இறக்கிவிடுவதற்கு கார் தயாரிப்பாளர்களும், தொழில்நுட்ப ஸ்தாபனங்களும் கங்கணம் கட்டி களமிறங்கியுள்ளன. கூகுள் தானியங்கி கார், வால்வோ தானியங்கி கார் மற்றும் நிசான் தானியங்கி கார்கள் குறித்த செய்திகளை வழங்கியுள்ளோம்.
இந்த நிலையில், அமெரிக்காவின் கார்னிகி மெலன் பல்கலைகழகத்தில் பணிபுரிந்து வரும் இந்திய வம்சாவளி விஞ்ஞானி ராஜ் ராஜ்குமார் என்பவர் தலைமையிலான குழு டிரைவரின் உதவியின்றி தன்னிச்சையாக செல்லும் காரை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் அந்த கார் சாலையில் இயக்கி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சோதனை ஓட்டம்
அமெரிக்காவின் பசடீனாவிலுள்ள கிரான்பெர்ரி என்ற இடத்திலிருந்து பிட்ஸ்பர்க் சர்வதேச விமான நிலையம் வரை போக்குவரத்து மிகுந்த சாலைகளில் எந்தவொரு சிறு அசம்பாவிதமும் இல்லாமல் 53 கிமீ தூரத்துக்கு வெற்றிகரமாக அந்த கார் வந்தடைந்தது. முன்னெச்சரிக்கையாக டிரைவர் ஒருவர் இருந்ததோடு, போக்குவரத்து துறையை சேர்ந்த அதிகாரிகளும் இருந்தனர்.

கேடில்லாக் எஸ்ஆர்எக்ஸ்
ஜெனரல் மோட்டார்ஸ் அங்கமான கேடில்லாக் பிராண்டின் எஸ்ஆர்எக்ஸ் சொகுசு எஸ்யூவி காரில்தான் அனைத்து சாதனங்களும் பொருத்தப்பட்டு டிரைவரில்லா காராக மாற்றப்பட்டு இருந்தது.

ரேடார் உதவி
ரேடார்கள், லேசர் கருவிகள், கேமரா மற்றும் பிரத்யேக சாஃப்ட்வேர் மூலம் இந்த கார் தானியங்கி முறையில் செல்லும்.

பாதுகாப்பான பயணம்
போக்குவரத்து மிகுந்த சாலைகளில் நிலைமைக்கு ஏற்ப வழித்தடத்தை மாற்றி செல்வது, சிக்னல் விளக்குகளின் சமிக்ஞைகளை கண்டுணர்ந்து செல்லும் வகையிலான மிக பாதுகாப்பான காராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கண்டுணர்வு திறன்
சாலை நிலவரத்துக்கு தக்க வேகம், காரை நிறுத்துவது, வழித்தடத்தை மாற்றிக் கொள்வது என அனைத்துமே தானியங்கி முறையில் நடக்கும். குறுக்கே பாதசாரிகள் அல்லது விலங்குகள் வந்தால் அதனை எளிதாக கண்டுபிடித்து பிரேக் பிடித்து நின்றுவிடும்.

எச்சரிக்கை
காரில் இருப்பவர்களுக்கு மனித குரலிலேயே எச்சரிக்கை மற்றும் விளக்கம் அளிக்கும் வசதியும் உள்ளது.

கம்ப்யூட்டர்
இந்த காரை கட்டுப்படுத்தும் கம்ப்யூட்டர்கள் காரின் டிக்கி பகுதிக்குள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகளுக்கு இடையூறு இருக்காது என்பதுடன், பிற தானியங்கி கார்களை போல் இல்லாமல், இதற்கான கருவிகள் செலவு மிகவும் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்குமார் கூற்று
இந்த கார் குறித்து விஞ்ஞானி ராஜ் ராஜ் குமார் கூறுகையில், " மனித தவறுகளால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்பதோடு, குடி போதை டிரைவிங் மற்றும் மொபைல்போன் டிரைவிங்கால் ஏற்படும் அபாயங்களையும் தவிர்க்கும். மேலும், பயண நேரத்தையும் வெகுவாக மிச்சப்படும் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








