முதல் எஸ்யூவியை களமிறக்கும் ஜாகுவார்!
டாடா மோட்டார்ஸ் அங்கமாக செயல்படும் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஜாகுவார் செடான் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக கார்களின் தயாரிப்பில் மட்டும் கவனத்தை செலுத்தி வருகிறது. லேண்ட்ரோவர் நிறுவனம் ஆடம்பர எஸ்யூவி ரக கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த இரு நிறுவனங்களின் வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் விதமாக ஆண்டுக்கு 1.5 மில்லியன் பவுண்ட்டுக்கும் மேல் டாடா மோட்டார்ஸ் முதலீடு செய்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது எஸ்யூவி கார்களுக்கு அதிகரித்து வரும் மவுசை கருத்தில்கொண்டு ஜாகுவார் நிறுவனம் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த இருக்கிறது. மேலும், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், ஆடி ஏ3 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார்களுக்கு போட்டியாக புதிய செடான் காரையும் அறிமுகப்படுத்த இருக்கிறது. இது பிற சொகுசு கார் நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளாட்பார்ம்
ஜாகுவார் எக்ஸ்ஜே காரின் பிளாட்பார்மில் புதிய கிராஸ்ஓவர் ரக எஸ்யூவியும், காம்பெக்ட் செடானும் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதிக அலுமினிய பாகங்கள் பயன்படுத்தப்படுவதால் இலகு எடை கொண்டதாகவும், வடிவமைப்பு செலவீனம் குறைவாகவும் இருக்கும்.

பெயருக்கு காப்புரிமை
க்யூ டைப் மற்றும் எக்ஸ்க்யூ டைப் ஆகிய பெயர்களில் இந்த எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு பெயர்களுக்கும் ஜாகுவார் காப்புரிமை பெற்றுள்ளது.

புதிய எஞ்சின்
ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் உருவாக்கி வரும் புத்தம் புதிய 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் இந்த கார்களில் பொருத்தப்பட உள்ளன. பெட்ரோல் மாடலில் 240 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

போட்டியாளர்
பிஎம்டபிள்யூ எக்ஸ்3 கிராஸ்ஓவர் எஸ்யூவி ரக காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

விற்பனை
புதிய எஸ்யூவியின் வடிவமைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. எனவே, சோதனைகள் முடிந்து 2015ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.


Click it and Unblock the Notifications








