360 டிகிரி கோணத்தில் திரும்பும் வசதி கொண்ட ஜீப் ஹூரிக்கேன்- தகவல்கள்
ஜீப் ஹூரிக்கேன்... இந்த பெயர் ஆட்டோமொபைல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கான்செப்ட் எஸ்யூவி மாடல். அமெரிக்காவை சேர்ந்த ஜீப் பிராண்டின் கான்செப்ட் நிலை எஸ்யூவி. கடந்த 2005ம் ஆண்டு டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்த எஸ்யூவியின் தனித்துவம் என்னவெனில், இது பூஜ்யம் டர்னிங் ரேடியஸ் கொண்ட எஸ்யூவி. அதுமட்டுமல்லாது மிகுந்த பவர்ஃபுல் இரட்டை எஞ்சின் கொண்ட கான்செப்ட். ஏராளமான ஆட்டோமொபைல் விருதுகளை இந்த எஸ்யூவி பெற்றுள்ளது. எந்த ஒரு சாலையிலும் 360 டிகிரி கோணத்தில் திருப்பும் வசதி கொண்ட இந்த வித்தியாசமான கான்செப்ட் எஸ்யூவியை பற்றிய சில சுவையான பின்னணி தகவல்களை பகிர்ந்துகொள்கிறோம்.

டிசைன்
இதன் வெளிப்புற டிசைனை வடிவமைத்தவர் ஆரோன் பிஸுட்டி என்ற டிசைனர். ஆஃப் ரோடு பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அம்சங்கள் கொண்டதாகவும், மரியாதை செய்யவும் இந்த கான்செப்ட் உருவாக்கப்பட்டது.

ரொம்ப பவர்ஃபுல்
இந்த எஸ்யூவியின் முன்புறம், பின்புறம் தலா ஒரு 5.7 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. ஒரு எஞ்சின் 335 எச்பி பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மொத்தமாக 670 எச்பி பவர் கொண்ட ஜீப் மாடல் இது.

4 வீல் ஸ்டீயரிங்
இந்த எஸ்யூவிக்கான 0 டர்னிங் ரேடியஸ் கொண்ட ஸ்டீயரிங் சிஸ்டத்தை மில்லன் ஒர்க்ஸ் என்ற புகழ்பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனம் தயாரித்து கொடுத்தது.

கார்பன் ஃபைபர்
இந்த எஸ்யூவியின் பெரும்பான்மையான பாகங்கள் கார்பன் ஃபைபரால் ஆனது. எனவே, மிகுந்த இலகு எடை கொண்டதாக கட்டப்பட்டது. இதன் அடிப்பாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்கிட் பிளேட் உறுதியும், இலகு எடையும் கொண்ட அலுமினியத்தால் ஆனது.

கதவு கிடையாது
இந்த எஸ்யூவிக்கு கதவு, கூரை கிடையாது. மேலும், இரண்டு பேர் அமர்ந்து பயணம் செய்யும் வசதி கொண்டது.

விருதுகள்
இந்த கான்செப்ட் எஸ்யூவிக்கு ஐடியா சில்வர் விருது, சிறந்த புதிய தயாரிப்பு என்ற அறிவியல் துறை விருது, ஆட்டோவீக் இதழின் எடிட்டர் சாய்ஸ் ஆகிய பல விருதுகளை பெற்றுள்ளது.

உற்பத்தி
இந்த கான்செப்ட் எஸ்யூவியின் உதிரிபாகங்கள், தொழில்நுட்பங்களுக்கான செலவீனம், நடைமுறை சாத்தியம் உள்ளிட்டவற்றில் பல இடர்பாடுகள் இருந்ததால் உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்லப்படவில்லை.

காப்புரிமை
இந்த எஸ்யூவியின் பல தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இருப்பினும் உற்பத்தி நிலையை எட்டாதது ஆட்டோமொபைல் பிரியர்கள் மத்தியில் இன்றளவும் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.


Click it and Unblock the Notifications








