எங்க கார் விக்காததுக்கு இதுதான் காரணம்: லம்போ தலைவரின் குற்றச்சாட்டு
இந்தியாவில் இதுவரை 90 லம்போர்கினி சூப்பர் கார்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் லம்போர்கினி கார் நிறுவனத்தின் இரண்டாவது புதிய கார் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் லம்போர்கினி தலைவர் ஸ்டீபன் வின்கெல்மேன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் இதுவரை 90 லம்போர்கினி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 30 -40 வயதுடைய வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோம்," என்றார்.

இந்தியர்கள் ஆர்வம்
பல வெளிநாடுகளில் லம்போர்கினி சூப்பர் கார்களை வாங்குவதில் இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இந்தியாவில் மோசமான சாலைகள் மற்றும் அதிகப்படியான இறக்குமதி வரியால் வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதேவேளை, அடுத்து வரும் ஆண்டுகளில் எங்களது வர்த்தகத்தை இரட்டிப்பாக்கத் திட்டம் வைத்துள்ளோம்," என்றும் வின்கெல்மேன் தெரிவித்தார்.

அவென்டேடார் மாடல்கள்
இந்தியாவில் அவென்டேடார் எல்பி 560 4 மற்றும் எல்பி 570 4 ஆகிய இரண்டு மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது.

அவென்டேடார் ரோட்ஸ்டெர்
அவென்டேடாரின் ரோட்ஸ்டெர் எல்பி 700 4 காரும், அவென்டேடார் எல்பி 700 4 மாடல்களும் இந்தியாவில் கிடைக்கின்றன.

கல்லார்டோ
கல்லார்டோ வரிசையில் கூபே, ஸ்பைடர், சூப்பர்லெகரா, எல்பி 560 4, எல்பி 570 4, எடிசியோன் டெக்னிகா ஆகிய மாடல்களில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

விலை
ரூ.2.8 கோடி முதல் ரூ.6.30 கோடி வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் லம்போர்கினி மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

பெங்களூரில் புதிய ஷோரூம்
தென் இந்திய மார்க்கெட்டை பிடிக்கும் விதமாக பெங்களூரில் புதிய ஷோரூமை திறக்க லம்போர்கினி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கு
நடப்பாண்டில் 20 சூப்பர் கார்களை விற்க லம்போர்கினி இலக்கு வைத்துள்ளது. ஆனால், மோசமான சாலைகளும், அதிக இறக்குமதி வரியும் வர்த்தகத்தை பாதிப்பதாக லம்போர்கினி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








