டிஃபென்டருக்கு புதிய வாழ்க்கை கொடுத்த லேண்ட்ரோவர்!
லேண்ட்ரோவரின் மிக பழமையான மாடல்களில் ஒன்று டிஃபென்டர் எஸ்யூவி. 1948ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த மாடல் நீண்ட பாரம்பரியத்தை கொண்ட எஸ்யூவி மாடலாக வலம் வருகிறது. இந்த நிலையில், டிஃபென்டருக்கு மாற்றாக டிசி100 என்ற புதிய தலைமுறை எஸ்யூவியை லேண்ட்ரோவர் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த நிலையில், டிஃபென்டரின் உற்பத்திக்கு முற்றாக குட்பை சொல்லாமல் புதிய வாழ்க்கை அமைத்துக் கொடுத்துள்ளது லேண்ட்ரோவர். ஆம், டிஃபென்டர் எஸ்யூவியை எதிர்கால எலக்ட்ரிக் எஸ்யூவிகளுக்கான ஆராய்ச்சி மாடலாக பயன்டுத்த உள்ளது லேண்ட்ரோவர். மேலும், எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் 7 கான்செப்ட் மாடல் டிஃபென்டர்களை ஜெனீவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்க இருக்கிறது லேண்ட்ரோவர். இந்த எலக்ட்ரிக் கான்செப்ட் மாடல்கள் ஆஃப்ரோடு தகவமைப்புகளையும், அதிக ஆற்றல் கொண்டதாகவும் இருக்கும் என்பதோடு சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது.
இதுகுறித்து லேண்ட்ரோவர் பிராண்டு சர்வதேச இயக்குனர் ஜான் எட்வர்ட்ஸ் கூறுகையில்," புதிய தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை கொடுப்பதும், முதலீடு செய்வதும் லேண்ட்ரோவரின் முக்கியக் கொள்கைகள். எங்களது எஞ்சினியரிங் பிரிவு வல்லுனர்கள் புதிய போக்குவரத்துக்கான தொழில்நுட்பங்களை வடிவமைப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இவை எதிர்கால போக்குவரத்துக்கான சிறந்த தீர்வாக அமையும்," என்றார்.

பவர்
இந்த எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் மோட்டார் 94 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன்கொண்டதாக இருக்கும். இது கரடு முரடான சாலைநிலைகளில் கூட எளிதாக டிஃபென்டரை செலுத்தும்.

பேட்டரி
எலக்ட்ரிக் டிஃபென்டரில் 410 கிலோ எடை கொண்ட லித்தியம் அயான் பேட்டரி எஞ்சின் பே பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. அதிக ஆற்றல் வாய்ந்த இந்த பேட்டரியின் சக்தி மூலம் 80 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.

சார்ஜ் நேரம்
இந்த பேட்டரியை 2 விதமான சார்ஜர்கள் மூலம் சார்ஜ் செய்ய முடியும். 7 கிலோவாட் சார்ஜர் மூலம் 4 மணி நேரத்தில் இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். 3 கிலோவாட் சார்ஜர் மூலம் இதன் பேட்டரி முழு சார்ஜ் ஆவதற்கு 10 மணி நேரம் பிடிக்கும்.

ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பம்
ஹில் டிசென்ட் கன்ட்ரோல் சிஸ்டம் மூலம் 30 கிலோவாட் அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டு பேட்டரியில் சேமிக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை இந்த டிஃபென்டர் கொண்டிருக்கிறது.

டிரான்ஸ்மிஷன்
இதில் பொருத்தப்பட்டிருக்கும் சிங்கிள் ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் டிஃபென்டருக்கு அதிகபட்ச டார்க்கை வழங்கும்.

பெர்ஃபார்மென்ஸ்
நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் டிஃபென்டர் 800 மிமீ ஆழம் பதியும் சேறு நிறைந்த சாலைகளில் கூட 12 டன் டிரக்கை இழுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டது.

நடமாடும் லேப்
இந்த புதிய தொழில்நுட்பத்திற்காக லேண்ட்ரோவர் நடமாடும் ஆய்வகத்தை அமைத்து சோதனைகளை நடத்தியிருக்கிறது. அனைத்து சாலைநிலைகளிலும் சிறப்பாக செல்லும் வகையிலான இந்த புதிய தொழில்நுட்பம் எதிர்கால லேண்ட்ரோவர் மாடல்களில் இடம்பெறும் என லேண்ட்ரோவர் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தின் தலைவர் ஆன்டனி ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








