கூடுதல் வரியை தவிர்க்க கார்களில் மாறுதல்: மஹிந்திரா முடிவு

கடந்த மத்திய பட்ஜெட்டில் எஸ்யூவி கார்கள் மீதான வரியை 27 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. 4 மீட்டருக்கும் அதிகமான நீளமும், 1.5 லிட்டருக்கு மேற்பட்ட திறன் கொண்ட எஞ்சினும், 170 மிமீ.,க்கும் அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்களுக்கு இந்த வரிச்சலுகை பொருந்தும் என்றும் புதிய நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டன.
இதன் எதிரொலியாக எஸ்யூவி மற்றும் சில செடான் கார்களின் விலை கணிசமாக உயர்ந்தது. மேலும், எஸ்யூவி தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனத்துக்கு இந்த வரி உயர்வு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. கூடுதலாக விதிக்கப்பட்ட 3 சதவீத வரியை திரும்ப பெற சியாம் வழியாக வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதனை ஏற்க முடியாது என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இந்தநிலையில், வேறு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் கூடுதல் வரியை தவிர்க்கும் பொருட்டு தனது எஸ்யூவி மற்றும் இதர யுட்டிலிட்டி வாகனங்களில் மாறுதல்களை செய்வதற்கு மஹிந்திரா முடிவு செய்துள்ளது. குவான்ட்டோவும், ,ஸைலோவின் சில வேரியண்ட்கள் மட்டும் சமீபத்திய வரி உயர்விலிருந்து தப்பின.
இந்த நிலையில், பொலிரோ, எக்ஸ்யூவி 500, ஸ்கார்ப்பியோ உள்ளிட்ட கார்களை மத்திய அரசின் புதிய எஸ்யூவி வரைமுறைகளுக்குள் கொண்டு வருவதற்கு மஹிந்திரா முடிவு செய்துள்ளது. நீளத்தையும், கிரவுண்ட் கிளியரன்சையும் குறைத்தும், கைவசம் உள்ள 1.5 லிட்டர் டீசலை பூட்டி புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா தலைவர் பவன் கோயங்கா கூறுகையில்,"எஸ்யூவி மீதான வரி உயர்வு எங்களது வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது. எனவே, எங்களது யுட்டிலிட்டி ரக கார்களில் மாறுதல்களை செய்ய முடிவு செய்துள்ளோம். ஆனால், இதற்கு ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும்.
அதேசமயம், உடனடி தீர்வு குறித்தும் பரிசீலித்து வருகிறோம். அதேவேளை, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும், வரி உயர்வு காரணமாக எங்களது எதிர்கால வடிவமைப்பு கொள்கைகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








