2012ல் ஆதிக்கம் செலுத்திய டாப்-10 கார் மாடல்கள் பட்டியல்!
கடந்த ஆண்டு கார் மார்க்கெட் விற்பனை வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இருப்பினும், சில கார் மாடல்கள் மார்க்கெட்டில் நிலவிய சோதனைகளையெல்லாம் கடந்து விற்பனையில் முன்னிலை வகித்தன.
2011ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சில மாடல்கள் விற்பனையில் பின்தங்கின. கடந்த ஆண்டு மார்க்கெட்டில் தொடர்ந்து மாருதியின் தயாரிப்புகள் முதல் 4 இடங்களை பிடித்ததுள்ளன. விற்பனையி்ல் முன்னிலை வகித்த டாப் - 10 கார்களின் பட்டியலை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

மாருதி ஆல்ட்டோ
2012ம் ஆண்டிலும் ஆல்ட்டோதான் விற்பனையில் நம்பர்-1 இடத்தை பிடித்தது. மேலும், புதிய ஆல்ட்டோவும் மாருதிக்கு ஆண்டு இறுதியில் பெரும் பங்களிப்பை வழங்கியது. முதல் இடத்தை பிடித்தாலும் 2011ம் ஆண்டு விற்பனையை ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு விற்பனை 9.28 விழுக்காடு சரிவை சந்தித்தது.

மாருதி ஸ்விப்ட்
மார்க்கெட்டின் தலைசிறந்த கார் என்ற பட்டத்தை தனதாக்கிக் கொண்டிருக்கும் ஸ்விப்ட் விற்பனை பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 2011ல் நான்காம் இடத்தில் இருந்த ஸ்விப்ட் கடந்த ஆண்டு இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. தொழிலாளர் பிரச்னையால் உற்பத்தி பாதிக்கப்பட்டபோதிலும், ஸ்விப்ட் விற்பனை கடந்த ஆண்டு 51.83 விழுக்காடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாருதி டிசையர்
மூன்றாம் இடமும் மாருதியின் தயாரிப்பான டிசையருக்கு சொந்தமாகியிருக்கிறது. 2011ம் ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டு டிசையர் விற்பனை 56.31 விழுக்காடு அதிகரித்திருக்கிறது.

மாருதி வேகன்-ஆர்
மாருதியின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றான வேகன்-ஆர் கார்தான் 4ம் இடத்தை பிடித்துள்ளது. ஆனால், பெட்ரோல் கார்கள் மீதான ஆர்வம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்ததன் எதிரொலியாக வேகன்-ஆர் விற்பனை கடந்த ஆண்டு 3.49 விழுக்காடு குறைந்துள்ளது.

ஹூண்டாய் ஐ10
விற்பனை பட்டியலில் மாருதியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த மாடல் ஹூண்டாய் ஐ10. 5ம் இடத்தை பிடித்த ஐ10 காரின் விற்பனை கடந்த ஆண்டு 29.85 விழுக்காடு சரிந்து பெரும் பின்னடவை சந்தித்துள்ளது.

டாடா இண்டிகா
2011ல் ஐந்தாம் இடத்தில் இருந்த இண்டிகா கடந்த ஆண்டு 6ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. டாக்ஸி மார்க்கெட்டில் அமோக வரவேற்பை பெற்றிருந்தாலும் தனிநபர் வாடிக்கையாளர்களை ஈர்க்காத மாடலாக இருப்பதே விற்பனையில் பின் தங்கியதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் இயான்
ஆல்ட்டோவுக்கு போட்டியாளராக கருதப்படும் இயான் விற்பனை பட்டியலில் 7ம் இடத்தை பிடித்துள்ளது. 2012ல் சராசரி விற்பனையை இயான் பதிவு செய்துள்ளது.

ஹூண்டாய் ஐ20
தோற்றம், வசதிகள் என அனைத்திலும் சிறந்த ஹேட்ச்பேக் கார் என வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற்றிருக்கும் ஐ20 கடந்த ஆண்டு விற்பனை பட்டியலில் ஒரு இடம் பின்தங்கி 8ம் இடத்தை பிடித்தது.

டாடா நானோ
ஒருவழியாக டாப் 10 பட்டியலில் டாடா நானோவும் இடம் பிடித்துள்ளது. ஆல்ட்டோ, ஐ10 ஆகிய பெட்ரோல் கார்களின் விற்பனை சரிவை சந்தித்துள்ள நிலையில் நானோவின் விற்பனை 17.73 விழுக்காடு அதிகரித்துள்ளது. டீசல் மற்றும் சிஎன்ஜி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டால் நானோவின் விற்பனை நிச்சயம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஃபோர்டு ஃபிகோ
விற்பனை 8.65 விழுக்காடு குறைந்த போதிலும், 2011ம் ஆண்டிலிருந்த அதே இடத்தை 2012ம் ஆண்டிலும் தக்கவைத்துள்ளது ஃபோர்டு ஃபிகோ.


Click it and Unblock the Notifications








