புதிய டீசல் எஞ்சினுடன் வேகன்-ஆர் : மாருதி ஆயத்தம்
சிறிய கார்களில் பொருத்தும் அம்சங்கள் கொண்ட 3 சிலிண்டர் 1.0 லிட்டர் டீசல் எஞ்சினை மாருதி வடிவமைத்து வருகிறது. புதிய ஹேட்ச்பேக் கார் ஒன்றில் இந்த டீசல் எஞ்சினை பொருத்தி விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, ஏற்கனவே நாம் தெரிவித்ததை போல ஆல்ட்டோ, ஏ-ஸ்டார், வேகன்-ஆர் உள்ளிட்ட கார்களில் இந்த புதிய டீசல் எஞ்சினை பொருத்தவும் மாருதி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதி கார் ஆலை அமைந்திருக்கும் பகுதிகளுக்கு அருகாமையில் டீசல் ஏ-ஸ்டார் கார் தற்போது சோதித்து பார்க்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கும் இந்த டீசல் ஏ-ஸ்டார் கார் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.
இந்த புதிய டீசல் எஞ்சினுக்கான டர்போசார்ஜரை பிரபல ஹனிவெல் நிறுவனம் சப்ளை செய்ய இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. டாடா நானோவுக்காக பாஷ் நிறுவனம் வடிவமைத்து வரும் சிறிய டீசல் எஞ்சினுக்கான டர்போசார்ஜரை ஹனிவெல்தான் சப்ளை செய்ய உள்ளது.
இதேபோன்று, சமீபத்தில் விற்பனைக்கு வந்து ஹிட் ஆகியிருக்கும் ஹோண்டா அமேஸ் காரின் டீசல் எஞ்சினுக்கான டர்போசார்ஜரையும் ஹனிவெல்தான் சப்ளை செய்கிறது. எனவே, மாருதி வடிவமைத்து வரும் புதிய டீசல் எஞ்சின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இப்போது செவர்லே பீட்தான் மார்க்கெட்டில் இருக்கும் குறைந்த விலை மற்றும் டீசல் எஞ்சின் கொண்ட காராக இருக்கிறது. இதற்கு நேரடி போட்டியை தரும் விதத்தில் மாருதி டீசல் மாடல்களை வரிசைக் கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் தீபாவளி பண்டிகையையொட்டி புதிய டீசல் எஞ்சினுடன் வேகன்-ஆர் கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








