பிஎம்டபிள்யூவை துரத்தும் பென்ஸ்... எலக்ட்ரிக் பி கிளாஸ் காரை களமிறக்குகிறது
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ ஐ3 எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் எந்தளவு வெற்றி பெறும் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்த காரை பற்றிய அருமை பெருமைகள் இதுவரை ஏட்டளவிலேயே இருக்கிறது.இந்த நிலையில், பிஎம்டபிள்யூ ஐ3க்கு போட்டியாக, புதிய பி கிளாஸ் எலக்ட்ரிக் காரை மெர்சிடிஸ் பென்ஸ் களமிறக்க உள்ளது.
பிஎம்டபிள்யூ ஐ3 எலக்ட்ரிக் காரைவிட பி கிளாஸ் எலக்ட்ரிக் கார் பெரும் வெற்றியை பதிவு செய்யும் என பென்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. பி கிளாஸ் எலக்ட்ரிக் டிரைவ் என்ற பெயரில் வரும் இந்த புதிய கார் குறித்து கருத்து தெரிவித்த பென்ஸ் தலைவர் தாமஸ் வெப்பர்," போட்டி அதிகம் இல்லாவிட்டால், பி கிளாஸ் எலக்ட்ரிக் டிரைவ் கார் நிச்சயம் சிறந்த மாடலாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

எஸ்யூவி ஸ்டைல்
இந்த கார் குறித்த சில தகவல்களை தாமஸ் வெப்பர் வெளியிட்டார். அதில், புதிய பி கிளாஸ் எலக்ட்ரிக் கார் எஸ்யூவி ஸ்டைல் கொண்டதாக இருக்கும் என்று தெரிவித்தார். அதாவது, 18 இஞ்ச் அலாய் வீல் மற்றும் பேட்டரி பொருத்துவதால் இதன் ஸ்டைலில் வித்தியாசம் இருக்குமாம்.

இருக்கை வசதி
பிஎம்டபிள்யூ ஐ3 எலக்ட்ரிக் காரில் 4 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால், பென்ஸ் பி கிளாஸ் எலக்ட்ரிக் காரில் 5 பேர் பயணம் செய்ய முடியும் என தாமஸ் வெப்பர் கூறினார். இதுதவிர, ஒரு முறை சார்ஜ் செய்தால் ஐ3 எலக்ட்ரிக் கார் 190 கிமீ தூரம் மட்டுமே செல்ல முடியும். ஆனால், பி கிளாஸ் எலக்ட்ரிக் கார் ஒரு சார்ஜ்க்கு 200 கிமீ வரை பயணிக்க முடியும் என்று தாமஸ் வெப்பர் கூறினார்.

டாப் ஸ்பீடு
ஐ3 எலக்ட்ரிக் கார் மணிக்கு 150 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பி கிளாஸ் மணிக்கு 160 கிமீ வரை அதிகபட்ச வேகத்தை கொண்டதாக இருக்கும்.

பெர்ஃபார்மென்ஸ்
0 - 100 கிமீ வேகத்தை ஐ3 கார் 7.2 வினாடிகளில் தொடும் நிலையில், பி கிளாஸ் எலக்ட்ரிக் 7.9 வினாடிகள் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுகம்?
அடுத்த ஆண்டு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மார்க்கெட்டுகளில் பென்ஸ் பி கிளாஸ் எலக்ட்ரிக் டிரைவ் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால், இந்த கார் இந்திய மார்க்கெட்டுக்கு வருவதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம். ஏனெனில், இந்திய மார்க்கெட்டில் எலக்ட்ரிக் கார்களுக்கான கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதும், எலக்ட்ரிக் கார்களுக்கான ஊக்குவிப்பு திட்டங்கள் இல்லாததும் குறையாக இருக்கின்றன. விலை உள்ளிட்ட விபரங்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை.


Click it and Unblock the Notifications








