ஆடியுடன் போட்டா போட்டி... புதிய கன்வெர்ட்டிபிள் காரை களமிறக்கும் பென்ஸ்!
மீண்டும் நம்பர்- 1 இடத்தை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக, மாதத்துக்கு ஒரு புதிய கார் மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்து வருகிறது. சி கிளாஸ் ஸ்பெஷல் எடிசனை சமீபத்தில் அறிமுகம் செய்த அந்த நிறுவனம் அடுத்ததாக எஸ்எல்கே 55 ஏஎம்ஜி கன்வெர்ட்டிபிள் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஏஎம்ஜி பாடி கிட் பொருத்தப்பட்டு வரும் இந்த புதிய கார் மிகச்சிறந்த ஸ்போர்ட்ஸ் கன்வெர்ட்டிபிள் மாடலாக இருக்கும் என கருதப்படுகிறது. அடுத்த மாதம் 2ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த கார் குறித்த சில கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்
இந்த காரில் 421 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 5.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் டர்போசார்ஜர்கள் துணை இல்லாமல் இந்த ஆற்றலை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏஎம்ஜி 7ஜி ட்ரோனிக்ஸ் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

பெர்ஃபார்மென்ஸ்
கூரை மூடப்பட்டிருக்கும்போது 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

ஏஎம்ஜி பாடி கிட்
முன்புற ஏர் ஸ்பிளிட்டர்கள், சைடு ஸ்கர்ட், ரியர் டிஃபியூசர் ஆகியவை ஏஎம்ஜி பாடி கிட்டில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள். ஏஎம்ஜியின் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம், சிறப்பான கட்டுப்படுத்தும் திறன் கொண்ட காராகவும் இருக்கும். 18 இஞ்ச் அலாய் வீல்கள், நப்பா லெதர் இன்டிரியர் ஆகியவை இந்த காரின் மதிப்பை உயர்த்தும் அம்சங்களாக இருக்கும்.

டிரைவிங் ஆப்ஷன்கள்
எஃப்சியன்சி, ஸ்போர்ட் மற்றும் மேனுவல் என்ற 3 விதமான டிரைவிங் ஆப்ஷன்கள் கொண்டிருக்கும். இதனுடன் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டமும் இணைந்து செயல்புரியும். எனவே, மிகச்சிறப்பான செயல்திறன் கொண்ட காராக இருக்கும்.

எதிர்பார்க்கும் விலை
ரூ.1.2 கோடி விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாகுவார் எஃப் டைப் வி6 எஸ் மற்றும் ஆடி ஆர்8 வி8 மாடல்களுக்கு இது நேரடி போட்டியை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications








