வாரம் ஒருநாள் பஸ்சில் அலுவலகம் செல்ல அமைச்சர் வீரப்ப மொய்லி முடிவு
பெட்ரோலிய பொருட்களை சிக்கனப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், வாரத்தில் ஒருநாள் பஸ்சில் அலுவலகம் செல்ல இருப்பதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
ரூபாய் மதிப்பு சரிவடைவதற்கு பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதையடுத்து, பெட்ரோலிய பொருட்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், பெட்ரோலிய பொருட்களின் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில், அவர் வாரத்தில் ஒருநாள் காரில் செல்வதை தவிர்த்து பஸ் அல்லது மெட்ரோ ரயில் மூலம் அலுவலகம் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது," பெட்ரோலிய பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் விதத்தில் பொது போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளேன்.
அக்டோபர் 9ந் தேதி முதல் புதன்கிழமை தோறும் பஸ் அல்லது மெட்ரோ ரயிலில் அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளேன்.
நான் மட்டுமின்றி அனைத்து மாநில முதல்வர்கள், அரசு உயரதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களும் பஸ்களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.
எனது அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓஎன்ஜிசி, ஐஓசி உள்ளிட்ட 14 பொதுத்துறை நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், புதன்கிழமை தோறும் பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, இது தன்னார்வத்தின் அடிப்படையிலானது. யாரையும் நிர்பந்திக்கப் போவதில்லை. பஸ் தினம் மற்றும் இதர முயற்சிகள் மூலம் பெட்ரோலிய பொருட்களின் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையிலான பிரச்சாரங்களையும் மேற்கொள்ள இருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
பெட்ரோலிய பொருட்களை சேமிப்பதற்கு பெட்ரோல் நிலையங்களை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என்று வீரப்ப மொய்லி சமீபத்தில் கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, தனது நிலையிலிருந்து ஜகா வாங்கினார் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








