சென்னையில் புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் உற்பத்தி துவங்கியது!
சென்னையிலுள்ள ஆலையில் மேம்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரின் உற்பத்தி இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. கடந்த 10ந் தேதி மேம்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் டீசல் மாடலில் மட்டுமே வந்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்எஃப் கார்களுக்கு போட்டியாக வந்திருக்கும் இந்த புதிய மாடல் 520டி, 525டி மற்றும் 530டி எம் ஸ்போர்ட் ஆகிய மூன்று மாடல்களில் கிடைக்கும். இதில், 520டி மாடலில் லக்சுரி லைன் தவிர மாடர்ன் லைன் என்ற புதிய வேரியண்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

தோற்றத்தில் மாற்றம்
மேம்படுத்தப்பட்ட புதிய சிறுநீரக வடிவ கிரில், புதிய ஹெட்லைட் கன்சோல், முகப்பு பம்பரில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பின்புறத்திலும் பம்பர், டெயில் லைட்டுகளுடன், அலாய் வீல் டிசைனிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

2.0 லி எஞ்சின் வேரியண்ட்டுகள்
520 டி மாடலில் 184 எச்பி ஆற்றலையும், 380 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 525டி மாடலில் 218 எச்பி ஆற்றலையும், 450 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

3.0 லிட்டர் எஞ்சின் மாடல்
530டி மாடலில் 258 எச்பி ஆற்றலையும், 540 என்எம் டார்க்கையும் அளிக்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அனைத்து மாடல்களும் இசட்எஃப் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கும்.

டிரைவிங் ஆப்ஷன்கள்
அதிக எரிபொருள் சேமிப்பை தரும் வகையில் டிரைவிங் ஆப்ஷன்களை தேர்வு செய்யும் விதமான சிறப்பு தொழில்நுட்ப வசதி அனைத்து மாடல்களிலும் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும். சாலை நிலைகளுக்கு தக்கவாறு ஈக்கோப்ரோ, கம்போர்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ளஸ் ஆகிய 4 விதமாக டிரைவிங் ஆப்ஷனை மாற்றிக் கொள்ளலாம். இதில், ஸ்போர்ட் ப்ளஸ் ஆப்ஷன் 525டி மற்றும் 530டி மாடல்களில் மட்டுமே கிடைக்கும்.

விலை
520டி மாடர்ன் லைன்: ரூ.46.90 லட்சம்
520டி லக்சுரி லைன்: ரூ.46.90 லட்சம்
525டி லக்சுரி ப்ளஸ்: ரூ.51.90 லட்சம்
530டி எம் ஸ்போர்ட்: ரூ.57.90 லட்சம்


Click it and Unblock the Notifications








