இந்த ஆண்டு ரிலீசாகும் ஹேட்ச்பேக், செடான் கார்கள் - சிறப்பு தொகுப்பு
வாடிக்கையாளர்களை கவரவும், போட்டியை சமாளிக்கவும் கார் நிறுவனங்கள் அடுத்தடுத்து புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. இதில் சில புதிய மாடல்களாகவும், சிலவை மேம்படுத்தப்பட்ட மாடல்களாகவும் வர இருக்கின்றன.
கார் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு வசதியாக இந்த ஆண்டு ரிலீசாக இருக்கும் கார் ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களின் முக்கிய தகவல்களை இந்த சிறப்பு தொகுப்பில் வழங்குகிறோம். இந்த ஆண்டு புதிய மாடல்களை காட்டிலும் மேம்படுத்தப்பட்ட மாடல்களின் வருகை அதிகமாக இருக்கிறது.

மாருதி ஏ ஸ்டார்
விற்பனையில் தொடர்ந்து மந்தமாக இருந்து வரும் ஏ-ஸ்டார் காருக்கு புதுப்பொலிவு கொடுத்துள்ளது சுஸுகி. தோற்றத்தில் மேம்பட்டிருக்கும் புதிய ஏ-ஸ்டாரின் உட்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. 66 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் புதிய ஏ-ஸ்டார் இந்த ஆண்டு மத்தியில் வர இருக்கிறது. ரூ.3.8 லட்சம் முதல் ரூ.4.4 லட்சம் இடையிலான விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.

டாடா நானோ
விற்பனையை தூக்கி நிறுத்தும் முயற்சியாக நானோவுக்கு புதுப்பொலிவு கொடுத்து வருகிறது டாடா. மேலும், புதிய எரிபொருள் மாடல்களில் நானோ கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விரைவில் 800சிசி எஞ்சினுடன் டீசல் மாடலும், இந்த ஆண்டு இறுதியில் சிஎன்ஜி மாடலும் வர இருக்கிறது. டீசல் மாடல் லிட்டருக்கு 40 கிமீ வரை மைலேஜ் தரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய நானோ ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3.0 லட்சம் வரையிலான ஆரம்ப விலை கொண்டதாக இருக்கும்.

ஃபியட் புன்ட்டோ எவோ
தனியாக டீலர் நெட்வொர்க் அமைத்து களமிறங்கும் ஃபியட் விற்பனையில் பின் தங்கியிருக்கும் புன்ட்டோவை புதுப்பொலிவு கொடுத்து களமிறக்குகிறது. முகப்பில் சில மாற்றங்களுடன் 2 வித பெட்ரோல் மற்றும் 2 வித டீசல் மாடல்களில் புதிய புன்ட்டோ வர இருக்கிறது. ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் விலையில் இந்த ஆண்டு மத்தியில் அறிமுகமாக இருக்கிறது.

செவர்லே பீட்
முகப்பு கிரில், பம்பர் உட்பட தோற்றத்தில் சில மாறுதல்களுடன் புதிய பீட் காரை செவர்லே களமிறக்குகிறது. 79 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 58.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் டீசல் எஞ்சினுடன் வருகிறது. ரூ.3.75 லட்சம் முதல் ரூ.5.6 லட்சம் வரையிலான விலை கொண்ட வேரியண்ட்களில் வர இருக்கிறது. இந்த ஆண்டு மத்தியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் ஐ10
ஹூண்டாயின் விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வரும் ஐ10 விற்பனை கடந்த ஆண்டு சிறிது சரிவை கண்டிருக்கிறது. இதையடுத்து, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக மேம்படுத்தப்பட்ட ஐ10 காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்த இருக்கிறது. தற்போதைய மாடலைவிட தோற்றத்தில் அதிக மாற்றங்களை ஹூண்டாய் செய்துள்ளது. தற்போது 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்களுடன் ஐ10 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய மாடல் 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது. செப்டம்பரில் புதிய ஐ10 அறிமுகமாக இருக்கிறது. ரூ.3.6 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலான விலையில் வருகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ
மார்க்கெட்டில் போட்டியிட முடியாமல் தவிக்கும் மற்றொரு மாடல் ஃபோக்ஸ்வேகன் போலோ. பெட்ரோல், டீசல் மாடல்கள் இருந்தும் வாடிக்கையாளர்களின் கவனத்தை அவ்வளவாக ஈர்க்காததால் பவர்ஃபுல் எஞ்சின் கொண்ட புதிய போலோவை ஃபோக்ஸ்வேகன் களமிறக்க உள்ளது. 104 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினுடன் வர இருக்கும் புதிய போலோ 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்டிருக்கும். இதேபோன்று, 90 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் டீசல் மாடலையும் அறிமுகப்படுத்த உள்ளது. ரூ.8 லட்சம் விலையில் பவர்ஃபுல் போலோ அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா இ2ஓ - எலக்ட்ரிக் கார்
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் எதிர்பார்த்த மாடல்களில் ஒன்று. இ2ஓ என்ற பெயரில் வர இருக்கும் இந்த எலக்ட்ரிக் காரில் 4 பேர் பயணம் செய்யலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் 100கிமீ வரை செல்ல முடியும் என்பது இதன் பலம். ரூ.6 லட்சம் விலையில் மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது. இருப்பினும், அரசின் வரிச்சலுகைகள் மூலம் இந்த காரின் விலை ரூ.5 லட்சத்துக்குள் இருக்கும் என நம்பலாம். இன்னும் ஓரிரு மாதங்களில் மார்க்கெட்டுக்கு வருகிறது.

ஹோண்டா அமேஸ்
ஹோண்டாவின் முதல் டீசல் காராக அமேஸ் செடான் கார் வர இருக்கிறது. பிரியோவின் செடான் கார் வெர்ஷனாக வரும் அமேஸ் 4 மீட்டருக்குள் இருக்கும். இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. ரூ.5.5 லட்சம் முதல் ரூ.6.5 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏப்ரலில் மார்க்கெட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி டிசையர்
ஹோண்டா அமேஸ் வருகையால் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் விற்பனையை தக்க வைக்க வடிவமைப்பில் மாறுதல்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் புதிய டிசையரை மாருதி அறிமுகம் செய்ய இருக்கிறது. எஞ்சினில் மாற்றம் இருக்காது. தீபாவளி பண்டிகையையொட்டி இந்த புதிய கார் மார்க்கெட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா வெரிட்டோ
4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புதிய வெரிட்டோ காரை மஹிந்திரா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. தற்போதைய வெரிட்டோவிலிருந்து முகப்பை வேறுப்படுத்த புதிய பம்பரை பொருத்தப்பட உள்ளது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. ரூ.6 லட்சத்திற்குள் அறிமுகமாகும் என தெரிகிறது.

டாடா மான்ஸா சிஎஸ்
4 மீட்டருக்குள் சுருக்கப்பட்ட முதல் செடான் காரை அறிமுகப்படுத்திய டாடாவின் அடுத்த குட்டி செடான் மான்ஸா. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் புதிய மான்ஸா சிஎஸ் வருகிறது. ரூ.5 லட்சம் ஆரம்ப விலையில் வர இருக்கும் மான்ஸா சிஎஸ் இந்த ஆண்டு மத்தியில் அறிமுகமாக இருக்கிறது.

செவர்லே செயில் செடான்
கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட செயில் ஹேட்ச்பேக் காரின் செடான் வெர்ஷனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது செவர்லே. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகமாக உள்ளது. இந்த மாதத்திற்குள் இந்த புதிய செடான் கார் அறிமுகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








