ஏற்றுமதியில் புதிய மைல்கல்: சென்னை நிசான் ஆலை தகவல்கள்
சென்னை, ஒரகடத்தில் உள்ள நிசான் ஆலையிலிருந்து இதுவரை 3 லட்சம் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய மைல்கல்லை கடந்ததற்காக நேற்று நடந்த நிகழ்ச்சியில் நிசான் இந்தியா தலைவர் கெனிசிரோ யமுரா உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கெனிசிரோ யமுரா கூறுகையில்," எங்களது பணியாளர்களுக்கு முதற்கண் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது அர்பணிப்பு, உழைப்பால் இந்த புதிய மைல்கல்லை மிக குறுகிய காலத்தில் எட்டியிருக்கிறோம். ஏற்றுமதியை சிறப்பாக செய்வதற்கு ஒத்துழைப்பை நல்கி வரும் எண்ணூர் துறைமுக அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்," என்று கூறினார்.

சென்னை ஆலை
கடந்த 2008ம் ஆண்டு ரூ.4,500 கோடி முதலீட்டை 7 ஆண்டுகளில் செய்யும் திட்டத்துடன் சென்னை அருகே ஒரகடத்தில் நிசான் காரை ஆலை அமைகக்கும் பணிகள் துவங்கப்பட்டன. 2010ம் ஆண்டு மார்ச் 17ந் தேதி சர்வதேச தரத்திலான இந்த புதிய கார் ஆலை திறக்கப்பட்டது.

உற்பத்தி திறன்
ரெனோ மற்றும் நிசான் சேர்ந்து அமைந்திருக்கும் இந்த புதிய கூட்டணி ஆலையில் ஆண்டுக்கு 4 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 2016ல் இந்த ஆலையின் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 8 லட்சமாக உயர்த்த இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதற்காக, புதிய உற்பத்தி பிரிவும் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.

ஏற்றுமதி
மைக்ரா மற்றும் சன்னி கார்களை நிசான் நிறுவனம் ஆப்ரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள 100க்கும் அதிகமான நாடுகளுக்கு சென்னை ஆலையிலிருந்து ஏற்றுமதி செய்கிறது.

எண்ணூர் துறைமுகம்
எண்ணூர் துறைமுகத்தை முதன்முறையாக கார் ஏற்றுமதி முனையமாக பயன்படுத்திய பெருமை நிசான் நிறுவனத்துக்கு உண்டு. மேலும், கார் ஏற்றுமதிக்காக எண்ணூர் துறைமுகத்துடன் 10 ஆண்டுகளுக்கு நிசான் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

டட்சன் கார்
முதல் முறை கார் வாங்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து களமிறக்கப்பட உள்ள புதிய டட்சன் கோ ஹேட்ச்பேக் கார் ஒரகடம் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்பட உள்ளது. எனவே, ஆலையின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், ரெனோ - நிசான் கூட்டணியின் சென்னை ஆலை ரெனோ, நிசான் மற்றும் டட்சன் என மூன்று பிராண்டு கார்களை தயாரிக்கும் ஆலையாக உருவெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








