நிசான் - ஹிந்துஜா கூட்டணியில் உருவாகும் புதிய குட்டிக் கார்!

ஹிந்துஜா குழுமத்தின் அங்கமாக செயல்படும் நாட்டின் மிகப்பெரிய கனரக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட்டும், ஜப்பானை சேர்ந்த நிசானும் கூட்டணி அமைத்து தோஸ்ட் என்ற மினி டிரக்கை கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வந்தன.
இந்த மினி டிரக் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் இரண்டாவதாக ஸ்டைல் என்ற புதிய எம்பிவி கார் இரு தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஹிந்துஜா குழுமத்தின் கீழ் செயல்படும் டிஃபியன்ஸ் எஞ்சினியரிங் சர்வீசஸ் நிறுவனமும், நிசான் நிறுவனமும் இணைந்து புதிய குட்டிக் காரை வடிவமைத்து வருவதாக அசோக் லேலண்ட் தலைவர் தீரஜ் ஹிந்துஜா பிரபல செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த புதிய குட்டிக் கார் முழுக்க முழுக்க நிசான் நிறுவனத்துக்காக உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், கார் மார்க்கெட்டில் கால் பதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், அசோக் லேலண்ட் நிறுவனம் வர்த்தக மார்க்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தும் என்றும் தீரஜ் விளக்கம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சில தினங்களுக்கு முன் நடந்த டட்சன் பிராண்டின் அறிமுக விழாவில் 2016ம் ஆண்டுக்குள் மொத்தம் 17 புதிய கார்களை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக நிசான் தலைவர் கார்லோஸ் கோஸன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








