பெரிய அளவில் தானியங்கி கார்கள் உற்பத்தி: நிசான் அறிவிப்பு
2020ல் தானியங்கி கார்களின் உற்பத்தியை பெரிய அளவில் துவங்க திட்டமிட்டு இருப்பதாக நிசான் அறிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள நிசான் தலைமையகத்திலிருந்து நிசான் சிஇஓ., கார்லோஸ் கோஸ்ன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
"மனித தவறுகளால்தான் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன. இந்த புதிய தானியங்கி டிரைவிங் கார்கள் மூலம் இந்த பிரச்னைக்கு பெரிய தீர்வு காண முடியும்," என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தனி சோதனை மையம்
ஜப்பானில் தானியங்கி கார்களை சோதனை நடத்துவதற்கென மிகப் பெரிய சோதனை மையத்தை நிசான் அமைத்து வருகிறது. சாதாரண சாலைகள் போன்றே மக்கள் நடமாட்டம், போக்குவரத்து நெரிசல் கொண்டதாக இது அமைக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்த சோதனை மைய பணிகள் நிறைவு பெறும்.

அனைத்து கார்களிலும்...
தனது அனைத்து மாடல்களிலும் தானியங்கி டிரைவிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக நிசான் தெரிவித்துள்ளது.

கையை கடிக்காத விலை
வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஏதுவான விலையில் தானியங்கி கார்களை விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளதாக நிசான் கூறியிருக்கிறது.

தொழில்நுட்பம்
உலகின் பல முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி பொறியாளர்களின் கூட்டணியில் இந்த புதிய கார்களுக்கான தானியங்கி டிரைவிங் தொழில்நுட்பத்தை நிசான் உருவாக்கி வருகிறது.

சோதனை
இப்போது ஆரம்ப கட்ட தொழில்நுட்பங்களுடன் கூடிய தானியங்கி லீஃப் எலக்ட்ரிக் காரை நிசான் சோதனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேஃப்டி ஷீல்டு
பாதுகாப்பு கவசம் என்ற பெயரில் புதிய தானியங்கி டிரைவிங் தொழில்நுட்பத்தை நிசான் தயாரித்து வருகிறது. இதில், 360 டிகிரி கோணத்தில் படம் பிடிக்கும் கேமரா, சென்சார்கள், ரேடார்கள் மற்றும் எச்சரிக்கை கருவிகள் ஆகியவை இணைந்து செயல்படும்.

தடையில்லா பயணம்
வரைபடம் உள்ளிட்ட எதுவும் இல்லாமல் நீண்ட தூர வழித்தடங்களிலும் இந்த தானியங்கி தொழில்நுட்பம் கொண்ட கார்கள் வழித்தடத்தை செம்மையாக கண்டறிந்து செல்லும் என்று நிசான் தெரிவித்துள்ளது.

கொடுத்த வாக்கு...
2010ம் ஆண்டில் ஸீரோ எமிசன் கொண்ட எலக்ட்ரிக் கார்களை நனவாக்குவோம் என்று கூறினோம். அதன்படியே, தற்போது லீஃப் மூலம் அதனை நிறைவேற்றினோம். இப்போது தானியங்கி கார்களை பற்றி உறுதியளிக்கிறோம். நிச்சயம் 2020ல் அதனை நனவாக்குவோம் என்று நிசான் சிஇஓ., கார்லோஸ் கோஸ்ன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








