டீசல் கார் விற்பனையை விஞ்சிய பெட்ரோல் கார்கள்!

பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டதால், டீசல் கார் விற்பனை படு வேகமாக வளர்ந்தது. இதையடுத்து, அனைத்து நிறுவனங்களும் டீசல் கார் தயாரிப்புக்கும், அறிமுகத்துக்கும் முன்னுரிமை கொடுத்து வருகின்றன.
கடந்த ஜனவரி முதல் டீசல் விலையையும் மத்திய அரசு மாதாமாதம் உயர்த்தி வருவதால், தற்போது பெட்ரோல் கார் பக்கம் வாடிக்கையாளர் கவனம் திரும்பியுள்ளது. டீசல் கார்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை அதிகம் இருப்பதால், கூடுதல் முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது.
இதனை தவிர்த்துக் கொள்ளும் விதமாக பெட்ரோல் கார்களை வாங்கும்போக்கு அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் - ஜூன் வரையிலான காலத்தில் மொத்த கார் விற்பனையில் டீசல் கார்களின் விற்பனை பங்களிப்பு 42 சதவீதமாக இருந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இது 54 சதவீதமாக இருந்ததது. மேலும், கடந்த மாதம் டீசல் கார் விற்பனையை விட பெட்ரோல் கார் விற்பனை அதிகரித்துள்ளது. பெட்ரோல் கார் விற்பனை வளர்ச்சி 12.5 சதவீதமாக பதிவாகியுள்ளது.
ஜூன் மாதத்தில் பெட்ரோல் நுகர்வும் 5.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக பெட்ரோலிய அமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, ஜூனில் டீசல் நுகர்வு 1.8 சதவீதம் குறைந்துள்ளது. மாருதி ஆல்ட்டோ, வேகன் ஆர் மற்றும் ஹூண்டாய் இயான் போன்ற கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
மாருதி ஸ்விஃப்ட் டிசையர், ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட கார் மாடல்களின் டீசல் மாடல் விற்பனையும் குறைந்துள்ளதாக ஆட்டோமொபைல் துறை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல், டீசல் விலையில் நிலவும் மாற்றங்கள் காரணமாக இந்த மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. அதேவேளை, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு கார்களின் விற்பனையும் நீண்ட கால அடிப்படையில் சமமான விகிதத்தில் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று மாருதியின் உயரதிகாரி மாயன் பரீக் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








