போர்ஷே 911 காரின் கேப்ரியோலெட் மாடல்கள் அறிமுகம்
போர்ஷே 911 கார் மார்க்கெட்டுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதத்தில், 911 மற்றும் 911 டர்போ எஸ் கார்களின் கேப்ரியோலெட் மாடல்களை போர்ஷே அறிமுகம் செய்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ கண்காட்சியில் முறைப்படி அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய கார்கள் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வந்திருக்கிறது. மிகச்சிறப்பான தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கும் இந்த கார்களின் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

உறுதியான சேஸீ
911 மற்றும் டர்போ எஸ் கார்களில் திறந்து மூடும் கூரை கொடுக்கப்பட்டுள்ளதால், இந்த அதிவேக பெர்ஃபார்மென்ஸ் கார்களின் கட்டமைப்பில் குறைபாடு இருக்கும். எனவே, இந்த காரின் சேஸீயை மிக உறுதியாக கொடுத்துள்ளது போர்ஷே. இதனால், கூரை கொண்ட மாடல்களைவிட இதன் எடை அதிகம்.

எஞ்சின்
இந்த இரண்டு மாடல்களிலும் 3.8 லிட்டர் ட்வின் டர்போ எஞ்சின்தான் பொருத்தப்பட்டு இருக்கிறது. இவை முறையே 520 பிஎஸ் பவரையும், 560 பிஎஸ் பவரையும் அளிக்கும். பிடிகே டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கின்றன.

பெர்ஃபார்மென்ஸ்
0 - 100 கிமீ வேகத்தை 911 கேப்ரியோலெட் மாடல் 3.3 வினாடிகளிலும், டர்போ எஸ் மாடல் 3.1 வினாடிகளிலும் எட்டிவிடும். ஆனால், எடை அதிகம் என்பதால் சாதாரண கூரை கொண்ட மாடலைவிட இந்த வேகத்தை எட்டுவதற்கு 0.2 வினாடிகள் கூடுதலாக எடுத்துக் கொள்ளும்.

திறந்து மூடும் கூரை
13 வினாடிகளில் இதன் கூரையை மூடும் திறன் கொண்டது. மேலும், மணிக்கு 48 கிமீ வேகத்தில் இந்த கூரை மூடும்.

மெக்னீசியம் கூரை
இந்த அதிவேக காரின் கூரை மெக்னீசியத்தில் செய்யப்பட்டுள்ளது. மேலும், கூரை மூடியிருக்கும்போது கூபே கார் போன்ற தோற்றத்தை தரும் வகையில் போர்ஷே எஞ்சினியர்கள் மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.

ஆக்டிவ் ஏரோடைனமிக்ஸ்
ஆக்டிவ் ஏரோடைனமிக்ஸ் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் வேகத்துக்கு தகுந்தவாறு புவியீர்ப்பு மைய விசையை தாழ்வாக மாற்றும் தொழில்நுட்பம் இருக்கிறது. இதன்மூலம், அதிக நிலைத்தன்மையுடன் கார் செல்லும்.

டாப் ஸ்பீடு
இரண்டு கார்களும் 314 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விலை
லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த கார் டிசம்பர் மாதம் முதல் விற்பனைக்கு செல்கிறது. அமெரிக்காவில் ஒரு கோடி முதல் ரூ.1.2 கோடி விலையில் விற்பனைக்கு செல்ல இருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








