நிசான் எவாலியாவின் ரீபேட்ஜ் எம்பிவியை களமிறக்கும் ரெனோ!!
இந்தியாவில் ரீபேட்ஜ் மாடல்களை களமிறக்குவதில் ரெனோ மற்றும் நிசான் கூட்டணி படு மும்முராக இருக்கின்றன. இரண்டு நிறுவனங்களும் ஒன்றின் மாடல்களை மற்றொன்று ரீபேட்ஜ் செய்து வெளியிட்டு வருகின்றன.
நிசானின் மைக்ரா, சன்னி கார்களின் ரீபேட்ஜ் மாடல்களாக பல்ஸ், ஸ்காலா என்ற பெயர்களில் ரெனோ பிராண்டில் வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து, டஸ்ட்டரின் ரீபேட்ஜ் மாடலான டெரானோவை நிசான் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த நிலையில், நிசான் எவாலியா எம்பிவி காரின் ரீபேட்ஜ் மாடலை ரெனோ வெளியிட இருக்கிறது. அடுத்த 24 மாதங்களில் இந்த புதிய எம்பிவியின் ரீபேட்ஜ் பணிகள் முடிவடையும் என ரெனோ தெரிவித்துள்ளது.
இதுதவிர, இரண்டு நிறுவனங்களின் பொதுவான பிளாட்பார்மில் குறைந்த விலை கார் ஒன்றையும் அடுத்த 2 ஆண்டுகளில் வெளியிட இருக்கிறது ரெனோ.
அடுத்த 18 மாதங்களில் 5 புதிய மாடல்களை இறக்க இருப்பதாக ரெனோ தெரிவித்திருந்த நிலையில், அந்த பட்டியலில் இந்த 2 புதிய மாடல்களும் இணைந்துள்ளன.
இதன்மூலம், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் 7 புதிய கார் மாடல்களை ரெனோ அறிமுகப்படுத்த உள்ளது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








