காமன்வெல்த் மாநாடு: 90 ரோல்ஸ்ராய்ஸ் காரை இறக்குமதி செய்யும் இலங்கை!
இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கு வரும் தலைவர்கள் பயன்படுத்துவதற்காக 90 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை இலங்கை அரசு இறக்குமதி செய்ய உள்ளது. இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் வரும் நவம்பர் மாதம் 15ந் தேதி முதல் 17ந் தேதி வரை காமன்வெல்த் நாட்டு தலைவர்களின் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில், காமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஆனால், போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கையில் நடைபெறும் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்; அல்லது வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனும் இலங்கையிலிருந்து காமன்வெல்த் மாநாட்டை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் சமீபத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், காமன்வெல்த் மாநாட்டுக்கான பணிகளை இலங்கை அரசு படு தீவிரமாக செய்து வருகிறது. மேலும், 90 நாடுகளின் தலைவர்களுக்கும்(பிரதமர் மன்மோகன்சிங்கும் அடக்கம்), 4,000 சிறப்பு விருந்தினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. மேலும், காமன்வெல்த் மாநாட்டுக்கு வருகை தர இருக்கும் தலைவர்கள் பயன்படுத்துவதற்காக 90 ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஆடம்பர கார்களை அந்நாட்டு அரசு இறக்குமதி செய்ய உள்ளது.
இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி., ஹெரின் ஃபெர்னான்டோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"காமன்வெல்த் மாநாட்டுக்காக ஆடம்பர கார்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.
இது தேவையற்றது. மேலும், அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தலைவர்களில் அனைவரும் வருவார்கள் என்று கூற இயலாது. மேலும், கார்களை இறக்குமதி செய்வதால் அரசின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது," என்று கூறினார்.
அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தலைவர்களின் பிரதமர் மன்மோகன்சிங்கும் அடக்கம். இறக்குமதி செய்யப்படும் கார்களில் ஒன்று பிரதமர் மன்மோகன்சிங் பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








