சர்வதேச ஏற்றுமதி தலைமையகத்தை இந்தியாவில் அமைக்கும் சுஸுகி!
கார் ஏற்றுமதி விவகாரங்களுக்கான புதிய தலைமையகத்தை இந்தியாவில் அமைக்க சுஸுகி முடிவு செய்துள்ளதாக மாருதி தலைவர் ஆர்.சி.பர்கவா தெரிவித்துள்ளார்.
ஜப்பானை சேர்ந்த பல கார் நிறுவனங்கள் இந்தியாவை கார் உற்பத்தி மையமாகவும், ஏற்றுமதி கேந்திரமாகவும் பயன்படுத்தி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி தனது சர்வதேச ஏற்றுமதி விவகாரங்களுக்கான தலைமையகத்தை இந்தியாவில் அமைக்கிறது.

இதுகுறித்து மாருதி சுஸுகி தலைவர் ஆர்.சி.பர்கவா கூறியதாவது," தற்போது சுஸுகியின் ஏற்றுமதி பிரிவு சம்பந்தப்பட்ட நாடுகளிலேயே செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஏற்றுமதி விவகாரங்களை ஒட்டுமொத்தமாக கவனிக்கும் வகையில் இந்தியாவில் தலைமையகத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியின் வசந்த் கஞ்ச் பகுதியிலுள்ள எங்களது அலுவலகத்தில் இந்த புதிய தலைமையகம் மாற்றப்பட உள்ளது.
மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதி விவகாரங்கள் இந்த புதிய தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது.
அடுத்த நிதி ஆண்டின் இறுதியில் இந்த புதிய தலைமையகம் செயல்பட துவங்கும். ஏற்றுமதி தலைமையகம் மாருதி சுஸுகி நிர்வாகத்தின் கீழ் செயல்படும்," என்று அவர் கூறினார்.
ஜப்பானில் பணியாளர்களுக்கான ஊதியம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியால், சிக்கன நடவடிக்கைகளை சுஸுகி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே சர்வதேச ஏற்றுமதி விவகாரங்களுக்கான தலைமையகத்தை இந்தியாவுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








