இந்த கார் டிசைனாவது அதிபர் புடினுக்கு பிடிக்குமா? - கவலையில் ரஷ்ய அதிகாரிகள்
ரஷ்ய அதிபர் புடினுக்கு பழைய கார் அலுத்து போனதால், புதிய லிமோசின் ரக கார் ஒன்றை வாங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடனே, பென்ஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்களை அணுக அவர்கள் முடிவு செய்தனர். ஆனால், அந்த கார் உள்நாட்டு தயாரிப்பாக இருக்க வேண்டுமென அதிபர் புடின் கறாராக கூறிவிட்டார்.
இதையடுத்து, அந்நாட்டை சேர்ந்த மாரஷ்யா மற்றும் கார்டிசைன்.ஆர்யு ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த லிமோசின் காரை வடிவமைக்க கைகோர்த்தன. கடந்த பிப்ரவரியில் இதற்காக கார் வடிவமைப்பு போட்டி ஒன்றையும் அவர்கள் அறிவித்தனர். அதில், கிட்டதட்ட 100 பேர் தங்களது டிசைனை இந்த நிறுவனங்களிடம் சமர்ப்பித்தனர். இதில், அந்நாட்டை சேர்ந்த சில கார் நிறுவனங்களும் அடக்கம்.

கடும் போட்டி
100 டிசைன்களில் இரண்டாம் சுற்றுக்கு 20 கார் டிசைன்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற டிசைனை மாரஷ்யா வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில்தான் அதிபர் விலாடிமிர் புடினுக்கு புதிய லிமோசின் கார் வடிவமைக்கப்பட உள்ளது.

வெற்றியாளர்கள்
யரஸ்லோவ் யகோவ்லோவ் மற்றும் பெர்ன்ட் வீல் என்பவர்களது டிசைன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோல்ஸ்ராய்ஸ் முகப்பு
முன்பக்கம் ரோல்ஸ்ராய்ஸ் கார்களை நினைவூட்டுகிறது. ஆனால், ரோல்ஸ்ராய்ஸ் கார்களை விட சற்று மென்மையாக இருக்கிறது கிரில்கள்.

பின்புறம்
பின்புற பூட் பகுதி பல்கோண உருவத்துடன், அதன் கீழே இரட்டை புகை போக்கி குழாய்களுடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

லிமோசின்
உலகிலேயே அமெரிக்க அதிபரின் கார்தான் மிகவும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும், பல ரகசியங்களை உள்ளடக்கியதாகவும் கூறப்படுகிறது. அதுபோன்ற அம்சங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது புடினின் விருப்பமாம்.

பாதுகாப்பு அம்சங்கள்
குண்டு துளைக்காத வசதி, தீத்தடுப்பு சாதனங்கள் மற்றும் பாகங்கள், தொலைதொடர்பு வசதிகளை இந்த கார் கொண்டிருக்கும்.

அதிபர் ஒத்துக்கணுமே
இந்த டிசைனை தேர்வு செய்துவிட்டாலும் இதில் அதிபர் புடினுக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.


Click it and Unblock the Notifications








