பிரெஞ்ச் பணியாளர்கள் வேஸ்ட்; இந்தியர்கள் பெஸ்ட்: டைட்டன் சிஇஓ கருத்தால் சர்ச்சை

வட பிரான்ஸ் பகுதியிலுள்ள குட்இயர் அமியன்ஸ் டயர் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் அதனை விற்க பிரான்ஸ் அரசு முடிவு செய்தது. அந்த நிறுவனத்தை கையகப்படுத்த அமெரிக்காவை சேர்ந்த டைட்டன் டயர் நிறுவனத்துக்கு கடிதம் மூலம் அணுகியது.
இதுதொடர்பாக, டைட்டன் டயர் நிறுவனத்தின் சிஇஓ மாரிஸ் டெய்லருக்கு பிரான்ஸ் நாட்டு அமைச்சர் அர்னாடு மோன்ட்டிபர்க் கடிதம் ஒன்றை அனுப்பினார். இதற்கு பதில் அனுப்பிய மாரிஸ் டெய்லர் குறிப்பிட்டிருந்த கருத்துக்கள் கண்டு பிரான்ஸ் அமைச்சரும், அந்நாட்டு தொழிலாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாரிஸ் டெய்லர் எழுதிய கடிதம் சமீபத்தில் பிரான்சை சேர்ந்த லெஸ் எக்கோஸ் என்ற வர்த்தக இதழின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், பிரெஞ்ச் பணியாளர்கள் அதிக ஊதியம் வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் வேலை பார்க்காமல் ஓபி அடிக்கின்றனர். தினமும் 3 மணி நேரம் வேலைபார்ப்பதே பெரிய விஷயம்.
டீ குடிக்கவும், சாப்பிடுவதிலும் ஒரு மணி நேரத்தை செலவிடுகின்றனர். வெட்டி பேச்சு பேசுவதற்கு 3 மணி நேரமும், வேலைக்கு 3 மணி நேரம் என கணக்கு வைத்து வேலை செய்கின்றனர்," என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதத்திற்கு பதில் அளித்த பிரான்ஸ் அமைச்சர் அர்னாட், இதனை எங்கள் தொழிலாளர்களிடம் தெரிவித்தோம். இது எங்களது ஸ்டைல் தெரிவித்தனர் என்று தொழிலாளர்களுக்கு வக்காலத்து வாங்குவது போன்று மாரிசுக்கு ஒரு பதிலை அனுப்பினார்.
இதற்கு டெய்லர் எழுதிய பதில்தான் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது, பிரெஞ்ச்காரர்களிடம் பணியை கொடுப்பதைவிட அதே வேலையை இந்தியர்கள் அல்லது சீனர்களிடம் கொடுத்தால் சிறப்பாக நடக்கும்.
மேலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு யூரோவுக்கும் குறைவான ஊதியத்தில் பிரான்சுக்கு தேவையான அனைத்து டயர்களையும் பெற முடியும். இது எங்கள் ஸ்டைல் என்று தெரிவித்த பணியாளர்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்," என்று தெரிவித்துள்ளார்.
இந்த வார்த்தை போர்தான் தற்போது பிரெஞ்ச் மீடியாவின் பரபரப்பாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








