செப்டம்பரில் டாப் - 10 இடங்களை பிடித்த கார்கள்
சுணக்க நிலையில் இருந்து வந்த கார் மார்க்கெட் பண்டிகை காலம் துவக்கதால் மெல்ல புத்தெழுச்சி கண்டு வருகிறது. மாருதி, ஹோண்டா, ஃபோர்டு உள்ளிட்ட கார் நிறுவனங்கள் செப்டம்பரில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. புதிய மாடல்களான ஹோண்டா அமேஸும், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டும் தமது உரிமையாளர்களுக்கு நல்ல வளர்ச்சியையும், கவுரவமான விற்பனை எண்ணிக்கையும் பெற்றுத் தந்துள்ளன.
இந்த நிலையில், ஹூண்டாய், மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களின் கார் விற்பனை சரிவை சந்தித்தது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் வந்து நல்ல விற்பனையை பதிவு செய்த போதிலும், அந்த நிறுவனத்தின் விற்பனையில் சரிவு ஏற்பட்டது. இருப்பினும், முதல் மாதத்திலேயே கிராண்ட் ஐ10 கார் சிறப்பான விற்பனையை பதிவு செய்து டாப் - 10 பட்டியலுக்குள் வந்துவிட்டது. கடந்த மாதம் விற்பனை அடிப்படையில் எந்த கார் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை ஸ்லைடரில் காணலாம்.

மாருதி ஆல்ட்டோ
கடந்த மாதம் மாருதி ஆல்ட்டோ காரின் விற்பனை நல்ல முன்னேற்றம் கண்டது. மேலும், சில மாதங்களாக 20,000க்குள் இருந்த அந்த காரின் விற்பனை மீண்டும் ஏற்றம் பெற்றது. செப்டம்பரில் மொத்தம் 23,620 ஆல்ட்டோ கார்களை மாருதி விற்பனை செய்தது.

மாருதி ஸ்விஃப்ட்
என் இடத்தை யாருக்கும் தரமாட்டேன் என்பதுபோல் ஸ்விஃப்ட் தொடர்ந்து இரண்டாவது இடத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் 16,839 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகி மாருதிக்கு கைகொடுத்தது.

மாருதி டிசையர்
ஸ்விஃப்ட்டுக்கு இணையாக அதன் காம்பெக்ட் செடான் மாடலான டிசையரும் விற்பனையில் போட்டி போட்டு வருகிறது. கடந்த மாதம் ஸ்விஃப்ட்டுக்கும், டிசையருக்கும் சிறிய வித்தியாசம்தான். செப்டம்பரில் 16,708 டிசையர் கார்களை மாருதி விற்பனை செய்தது.

மாருதி வேகன் ஆர்
முதல் நான்கு இடங்களை யாருக்கும் தர முடியாது என்பதுபோல், மாருதி கார்களின் ஆதிக்கம் தொடர்கிறது. அந்த வகையில், 4ம் இடத்தை தொடர்ந்து வேகன் ஆர் தக்க வைத்தது. கடந்த மாதம் 15,448 வேகன் ஆர் கார்கள் விற்பனையானது.

மஹிந்திரா பொலிரோ
பட்ஜெட் மற்றும் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சளைக்காமல் போட்டியிட்டு தொடர்ந்து 5வது இடத்தை மஹிந்திரா பொலிரோ தக்க வைத்து வருகிறது. செப்டம்பரில் 8,925 பொலிரோ கார்களை மஹிந்திரா விற்பனை செய்தது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10
விற்பனைக்கு வந்து முதல் மாதத்திலேயே ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நல்ல விற்பனையை பதிவு செய்துள்ளது. செப்டம்பரில் 8,411 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனையானது. மேலும், டாப்10 லிஸ்ட்டில் 6வது இடத்தை பிடித்து அசத்தியதுடன், ஹூண்டாய் நிறுவனத்துக்கும் சற்று நம்பிக்கையை கொடுத்துள்ளது.

ஹோண்டா அமேஸ்
கடந்த மாதம் ஹோண்டா கார் நிறுவனத்தின் விற்பனை 88 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு அமேஸ் காரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. மொத்தம் 6,679 அமேஸ் கார்கள் விற்பனையானதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

ஹூண்டாய் இயான்
மாருதி ஆல்ட்டோவுக்கு போட்டியாக பார்க்கப்படும் ஹூண்டாய் இயான் விற்பனை 6,284 கார்களாக பதிவானது. கடந்த மாத பட்டியலில் 8ம் இடத்துக்கு சென்றுவிட்டது இயான்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்
ஹோண்டா போன்று ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனையை தூக்கி நிறுத்திய பெருமை ஈக்கோஸ்போர்ட்டுக்கு கிடைத்துள்ளது. கடந்த மாதம் 6,203 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளை ஃபோர்டு விற்பனை செய்துள்ளது. பட்டியலில் 9ம் இடத்தில் உள்ளது ஈக்கோஸ்போர்ட்.

ஹூண்டாய் ஐ20
ஹூண்டாய் விற்பனைக்கும், பிராண்டு மதிப்புக்கும் உறுதுணையாக நின்று வரும் ஐ20 கார் டாப் 10 பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 5,741 கார்கள் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் எப்படியிருக்கும்?
பண்டிகை காலத்தை முன்னிட்டுபுதிய கார்களின் வரவு கடந்த மாத பட்டியலில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவற்றின் ஆளுமையை தெரிந்துகொள்ள அடுத்து வரும் மாதங்களின் விற்பனையை பார்த்தால் தெரியும். ஸ்திரமான விற்பனையை பதிவு செய்து டாப் 10 பட்டியலில் இடம் பெறப்போகும் கார்களை அடுத்த மாத பட்டியலில் தெரிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








