இந்தியாவின் குறைந்த பிரச்னைகள் கொண்ட நம்பிக்கையான கார்கள்
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார் மாடல்களில் குறைவான பிரச்னைகள் கொண்ட நம்பிக்கையான கார் மாடல்கள் குறித்து வாடிக்கையாளர்களிடம் ஜேடி பவர் ஏசியா பசிஃபிக் நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஹேட்ச்பேக் முதல் பிரிமியம் எஸ்யூவி வரையிலான செக்மென்ட் வரையிலான கார்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
100 கார்களில் ஏற்படும் பிரச்னைகளின் சராசரியை அடிப்படையாகக் சிறந்த கார்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் 100 கார்களில் குறைந்தபட்சமாக 225 பிரச்னைகள் முதல் அதிகபட்சமாக 280 பிரச்னைகள் வரை பதிவாகின. அதில், குறைவான பிரச்னைகளுடன் ஒவ்வொரு செக்மென்ட்டிலும் முன்னிலை பெற்ற கார்களை விபரங்களுடன் காணலாம்.

ஏ ஸ்டாருக்கு முதலிடம்
விற்பனையில் சொதப்பினாலும், ஹேட்ச்பேக் கார் செக்மென்ட்டில் குறைந்த பிரச்னைகள் பதிவான கார் மாடல் ஏ ஸ்டார்தான். 100 கார்களை எடுத்துக்கொண்டால் 209 பிரச்னைகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐ10
ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் மாருதி ஏ ஸ்டாருக்கு அடுத்து ஹூண்டாய் ஐ10 இரண்டாம் இடத்தை பிடித்தது. 100 கார்களில் 221 பிரச்னைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் சான்ட்ரோ
நீண்ட காலமாக தாக்குப் பிடித்து வரும் ஹூண்டாய் சான்ட்ரோவுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. ஐ10 காருக்கு அடுத்து 100 கார்களில் 223 பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஹேட்ச்பேக் கார் செக்மென்ட்டில் சராசரியாக 100 கார்களில் 269 பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஃபிகோ
பிரிமியம் ஹேட்ச்பேக் கார் செக்மென்ட்டில் ஃபோர்டு ஃபிகோ குறைவான பிரச்னைகள் கொண்ட காராக அறிவிக்கப்பட்டுள்ளது. 100 கார்களில் 241 பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி ரிட்ஸ்
இரண்டாம் இடத்தை மாருதி ரிட்ஸ் பெற்றுள்ளது. 100 கார்களில் 243 பிரச்னைகள் ஏற்படுகிறது என ஜேடி பவர் ஏசியா பசிஃபிக் தெரிவித்துள்ளது.

ஹூண்டாய் ஐ20
ஹூண்டாய் ஐ20 கார் மூன்றாம் இடத்தை பிடித்தது. 100 கார்களில் 246 பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த செக்மென்ட்டில் சராசரியாக 100 கார்களில் 270 பிரச்னைகள் இருக்கின்றனவாம்.

மாருதி டிசையர்
விற்பனையில் மட்டுமல்ல இந்த செக்மென்ட்டில் குறைவான பிரச்னைகளுடன் நம்பகமான காம்பெக்ட் செடானாக முதலிடம் பிடித்திருக்கிறது மாருதி டிசையர். 100 கார்களில் 272 பிரச்னைகள் ஏற்படுவதாக ஜேடி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாடா மான்ஸா
டாடா மான்ஸாவின் 100 கார்களில் சராசரியாக 362 பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா அமேஸ் வருவதற்கு முன்னரே தகவல்கள் திரட்டப்பட்டதால், இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த செக்மென்ட்டில் சராசரியாக 317 பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி
தரத்திற்கு பெயர் போன ஹோண்டாவின் பிராண்டு மதிப்பை வெகுவாக உயர்த்தியதில் முக்கிய கார் மாடல் ஹோண்டா சிட்டி. இந்த ஆய்விலும் மிட்சைஸ் செக்மென்ட்டில் ஹோண்டா சிட்டி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. 100 கார்களில் 237 பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி எஸ்எக்ஸ்4
மாருதியின் எஸ்எக்ஸ்4 கார் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. 100 கார்களில் 247 பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஃபியஸ்ட்டா
ஃபோர்டு குளோபல் ஃபியஸ்ட்டா காருக்கு இந்த ஆய்வில் மூன்றாம் கிடைத்தது. 100 கார்களில் 258 பிரச்னைகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. இந்த செக்மென்ட்டில் சராசரியாக 100 கார்களில் 274 பிரச்னைகள் ஏற்படுகின்றனவாம்.

செவர்லே குரூஸ்
பவர்ஃபுல் கார் என்ற பெயரெடுத்த செவி குரூஸ் கார்தான் பிரிமியம் மிட் சைஸ் செக்மென்ட்டில் முதலிடத்தை பிடித்தது. 100 கார்களில் 191 பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்ட அனைத்து கார் மாடல்களில் குறைந்த பிரச்னைகள் கொண்ட காரும் இதுதான். அதேவேளை, தற்போது தவேரா ரீகால் பிரச்னையால் செவர்லே பிராண்டு நம்பத் தகுந்த பிராண்டா என்ற அச்சம் வாடிக்கையாளர் மத்தியில் நிலவுகிறது.

ஸ்கோடா லாரா
இந்த ஆய்வில் உற்பத்தி நிறுத்தப்பட்ட ஹோண்டா சிவிக் 228 பிரச்னைகளுடன் இரண்டாம் இடத்தையும், 260 பிரச்னைகள் கொண்ட ஸ்கோடா லாரா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. ஸ்கோடா லாராவுக்கு மாற்றாக விரைவில் புதிய ஆக்டாவியா விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா இன்னோவா
இந்த செக்மென்ட்டில் டொயோட்டா இன்னோவா முதலிடம் பிடித்துள்ளது. 100 கார்களில் சராசரியாக 252 பிரச்னைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவர்லே தவேரா
எம்யூவி செக்மென்ட்டில் செவர்லே தவேரா 273 பிரச்னைகள் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா பொலிரோ
இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் யுட்டிலிட்டி வாகனமான மஹிந்திரா பொலிரோவுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. 100 கார்களில் 285 பிரச்னைகளும், இந்த செக்மென்ட்டில் விற்பனையாகும் 100 கார்களில் சராசரியாக 293 பிரச்னைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர்
இந்த செக்மென்ட்டில் மீண்டும் நம்பிக்கையான கார் பிராண்டாக டொயோட்டா ஃபார்ச்சூனர் முடிசூட்டிக் கொண்டுள்ளது. 100 கார்களில் 253 பிரச்னைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செக்மென்ட்டில் விற்பனையாகும் 100 கார்களில் 280 பிரச்னைகள் காணப்படுகின்றதாம்.

இதர கார்கள்
மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் 100 கார்களில் 284 பிரச்னைகளும், டாடா சஃபாரி டைகோர் மாடலின் 100 கார்களில் 309 பிரச்னைகளும் காணப்படுகிறதாம். ரெனோ டஸ்ட்டர் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காம்பெக்ட் எஸ்யூவிகள் இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

ஆய்வின் சாரம்சம்
கார் உரிமையாளர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் பிரச்னைகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு முடிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. கருத்து தெரிவித்த பெரும்பாலான வாடிக்கையாளர்களின் கார்கள் வாரண்டியில் இருந்தன. 11 செக்மென்ட்டுகளில் 61 மாடல்கள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. டிரான்ஸ்மிஷன், எஞ்சின், ஏசி, உடற்கூறு பிரச்னை, ஓட்டுதல் அனுபவம் உள்ளிட்ட 9 வகையான பிரச்னைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த நிலையில், தொழில்நுட்பங்கள் படுவேகமாக வளர்ந்தாலும், இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கும் சராசரி பிரச்னை எண்ணிக்கை சற்று அதிகம் என்பதால் கவலை தரும் விஷயம்தான்.


Click it and Unblock the Notifications








