டெல்லி எக்ஸ்போவில் மினி எஸ்யூவியை காட்சிப்படுத்த டொயோட்டா திட்டம்
டஸ்ட்டர், ஈக்கோஸ்போர்ட்டுடன் இன்று முதல் நிசான் டெரானோவும் இணைந்துள்ளதால், இந்தியாவின் காம்பெக்ட் எஸ்யூவி மார்க்கெட் அனல் பறக்க துவங்கியுள்ளது. இதுதவிர, மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களும் புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளன.
இந்த வரிசையில், ஜப்பானிய கார் தயாரிப்பாளரான டொயோட்டாவும் இணைய உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படும் ரஷ் மினி எஸ்யூவியை விரைவில் இந்தியா கொண்டு வர டொயோட்டா முடிவு செய்துள்ளதாம். வரும் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த டொயோட்டா மினி எஸ்யூவி பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

டொயோட்டா ரஷ்
இரண்டாம் தலைமுறை டைஹட்சூ டெரியோஸ் எஸ்யூவியின் ரீபேட்ஜ் மாடல்தான் டொயோட்டா பிராண்டில் விற்பனை செய்யப்படும் ரஷ். இந்தோனேஷிய மார்க்கெட்டும் இந்திய மார்க்கெட்டும் ஒன்று போல பல வித ஒற்றுமைகளை கொண்டிருப்பதால், அங்கு விற்பனை செய்யப்படும் ரஷ் மினி எஸ்யூவியை இங்கு கொண்டு வருவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எஞ்சின்
1.5 லிட்டர் எஞ்சின் பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் டீசல் மாடல் இல்லாமல் ஒன்றும் அசைக்க முடியாது அல்லவா. எனவே, லிவா உள்ளிட்ட கார்களில் செயலாற்றி வரும் 1.4 லிட்டர் டி 4டி டீசல் எஞ்சினை இந்த காரில் பொருத்தி விற்பனைக்கு கொண்டு வரும் வாய்ப்பு இருக்கிறது.

இருக்கை வசதி
மலேசிய மார்க்கெட்டில் நீட்டிக்கப்பட்ட வீல் பேஸ் கொண்ட மாடலும் விற்பனையில் இருந்து வருகிறது. அதே மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டால் மஹிந்திரா ஸ்கார்ப்பியோவுக்கு நேரடி போட்டியாளராக மாறும் வாய்ப்பும் இருக்கிறது. ஆனால், அதைவிட 4 மீட்டருக்குள் அடக்கப்பட்ட 5 சீட்டர் மாடல்தான் இந்தியாவில் ஹிட்டடிக்கும் வாய்ப்பு இருப்பதால் மினி மாடலே முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிகிறது.

4 வீல் டிரைவ்
இந்த மினி எஸ்யூவி 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுவும் டொயோட்டா ரஷ் எஸ்யூவிக்கு கூடுதல் பலமாக அமையலாம்.

சோதனை ஓட்டம்
இந்திய மண்ணில் வைத்து டொயோட்டா ரஷ் எஸ்யூவியின் சோதனை ஓட்டம் விரைவில் துவங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பிடதியிலிருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை கிட்டவில்லை.


Click it and Unblock the Notifications








