பண்டிகை காலத்தில் ரிலீசாகும் கார் மாடல்கள் - ஒரு பார்வை
விற்பனை மந்தமாக இருந்தாலும், பல புதிய மாடல்களுடன் பண்டிகை காலம் களைகட்டியுள்ளது. இன்று ஆடியின் க்யூ3 எஸ் என்ற புதிய பேஸ் மாடல் அறிமுகமாகிறது.
இதனைத்தொடர்ந்து ஏராளமான கார் மாடல்கள் தொடர்ந்து விற்பனைக்கு வர இருக்கின்றன. இன்று முதல் டிசம்பர் வரை ரிலீசாக இருக்கும் கார் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஆடி க்யூ3 எஸ்
பென்ஸ் ஏ கிளாஸ் மற்றும் விரைவில் விற்பனைக்கு வரும் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார்களின் நெருக்கடியை சமாளிக்கும் வகையில், இன்று க்யூ3 எஸ்யூவியின் புதிய பேஸ் மாடலை ஆடி விற்பனைக்கு கொண்டு வருகிறது. க்யூ3 எஸ் என்ற பெயரில் வரும் இந்த எஸ்யூவியின் புதிய தகவல்களை இன்று பிற்பகல் பார்க்கலாம்.

நிசான் டெரானோ
டஸ்ட்டரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலான நிசான் டெரானோ நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் என இரு மாடல்களிலும் வருகிறது. டஸ்ட்டரைவிட ரூ.50,000 வரை விலை கூடுதலாக இருக்கும் என்பது கணிப்பு.

மாருதி ஸ்டிங்ரே
விற்பனையில் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வரும் வேகன் ஆர் காரின் பிரிமியம் மாடலாக ஸ்டிங்ரே வருகிறது. கூடுதல் அம்சங்கள் கொண்ட ஸ்டிங்ரே நாளை மறுதினம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் வேகன் ஆரை விட ஸ்டிங்ரே ரூ.30,000 முதல் கூடுதல் விலை கொண்டதாக இருக்கும்.

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத்
ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் 23ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் இலகு எடை கொண்ட அதிவேக கார் என்பதுடன், கூபே ரகத்தில் டிசைன் செய்யப்பட்டது. ரூ.5 கோடி விலையில் வரலாம் என்பது எதிர்பார்ப்பு.

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்
பென்ஸ் ஏ கிளாஸுக்கு போட்டியாக அதிக இடவசதி கொண்ட காராக வருகிறது. பிஎம்டபிள்யூவின் என்ட்ரி லெவல் மாடலாக விற்பனைக்கு வரும் 1 சீரிஸ் ரூ.22 லட்சம் முதலான விலையில் விற்பனைக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது. குறைந்த விலை கொண்ட சொகுசு காராக வருவதால், வாடிக்கையாளர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் 3ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10
பட்ஜெட் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல். அடுத்த மாதம் 3ந் தேதி விற்பனைக்கு வர இருக்கிறது. பெட்ரோல் தவிர 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுடன் களமிறங்குவதால் பல்வேறு மாடல்களுக்கு இது சவாலாக இருக்கும். ரூ.4.5 லட்சம் முதலான விலையில் விற்பனைக்கு வரும் என்பது கணிப்பாக கூறலாம்.

சிஎன்ஜி நானோ
அடுத்த மாதம் சிஎன்ஜியில் இயங்கும் நானோ காரை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. நானோ இ மேக்ஸ் என்ற பெயரில் வரும் இந்த புதிய நானோ அதிக எரிபொருள் சிக்கனம் தரும் மாடலாக இருக்கும். விலை ரூ.2 லட்சத்தை தாண்டும்.

ஸ்கோடா ஆக்டாவியா
எக்ஸிக்யூட்டிவ் செடான் மார்க்கெட்டில் கலக்கப் போகும் கார் மாடலாக அறியப்படுகிறது. 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வருகிறது. லாராவுக்கு மாற்றாக நிலைநிறுத்தப்பட உள்ள இந்த கார் ரூ.13 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் இறங்கும். அடுத்த மாதம் அல்லது அக்டோபர் துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஜீப் ரேங்லர்
ஃபியட் - கிறிஸ்லர் கூட்டணியில் கீழ் செயல்படும் ஜீப் பிராண்டில் வரும் ஆஃப் ரோடர். ரூ.25 லட்சத்தில் விற்பனைக்கு வரலாம் என்பது எதிர்பார்ப்பு. 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக இருக்கும். ஜீப் பிராண்டின் செரோக்கீ பிரிமியம் எஸ்யூவியுடன் இணைந்து இந்த எஸ்யூவியும் விற்பனைக்கு வரும் வாய்ப்பு உள்ளது. தற்போது இரண்டு எஸ்யூவி மாடல்களும் இந்தியாவில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

மேம்படுத்தப்பட்ட ஃபியட் லீனியா
மேம்படுத்தப்பட்ட ஃபியட் லீனியா வரும் அக்டோபரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மஹாராஷ்டிராவில் இந்த கார் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த கார் பேஸ் மாடலாக மட்டும் விற்பனை செய்யப்படும் என்று ஃபியட் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

ஃபியட் புன்ட்டோ அபார்த்
ஃபியட்டின் அஸ்திரங்களில் ஒன்றாக கருதப்படும் புன்ட்டோ அபார்த் காரும் அக்டோபரில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ரூ.9 லட்சம் விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும் வாய்ப்புள்ளது. தோற்றத்தில் படு கவர்ச்சியும், கம்பீரமும் கலந்து நிற்கும் இந்த காரில் டர்போசார்ஜர் துணையுடன் பிளிரும் 1.4 லிட்டர் டி ஜெட் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதுதான் ஃபியட் லீனியா டி ஜெட் காரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், சர்வதேச அளவில் புன்ட்டோ அபார்த் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 150 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் எஞ்சினுடன் இந்த காரை களமிறக்க வேண்டும் என்பது நம்மூர் ஆட்டோமொபைல் பிரியர்களின் அவா.

முக்கிய குறிப்பு
இங்கே தரப்பட்டிருக்கும் அறிமுக தேதி மற்றும் விபரங்களில் மாறுபாடுகள் இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








