டைகுனுக்கு முன்னதாக டிகுவானை அறிமுகப்படுத்த ஃபோக்ஸ்வேகன் திட்டம்!
இந்தியாவில் எஸ்யூவி மாடல்களுக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. இதன் காரணமாக புதிய எஸ்யூவி மாடல்களை ஃபோக்ஸ்வேகன் களமிறக்க முடிவு செய்துள்ளது.
அதில், முதலாவதாக டிகுவான் எஸ்யூவியை அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. வரும் பிப்ரவரியில் நடைபெறும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய எஸ்யூவி பார்வைக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யெட்டி பிளாட்ஃபார்ம்
ஸ்கோடா யெட்டி எஸ்யூவியும், ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியும் ஒரே பிளாட்ஃபார்மில்தான் வடிவமைக்கப்படுகின்றன. இரண்டு கார்களிலும் ஒரே எஞ்சின்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

விலை
யெட்டி விலை அதிகம் என்பதால் விற்பனையில் சோபிக்கவில்லை. இந்த நிலையில், டிகுவானை மஹிந்திரா எக்ஸ்யூவி 500வுக்கு போட்டியான விலையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

புதிய எஞ்சின்கள்
2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சினை பொருத்தி டிகுவானை விற்பனைக்கு விட ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளதாம். தவிர, 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பொருத்துவதற்கான வாய்ப்புகளையும் ஃபோக்ஸ்வேகன் ஆராய்ந்து வருகிறது.

டைகுன் எப்போது?
டிகுவானை விட குறைந்த விலை கொண்ட டைகுன் என்ற புதிய எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. 2015ல் டைகுன் காம்பெக்ட் எஸ்யூவி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு டைகுன் போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








