அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பஸ், டிரக்குகளில் ஏபிஎஸ் பிரேக் அமைப்பு கட்டாயம்
வரும் ஏப்ரல் மாதம் முதல் தயாரிக்கப்படும் பஸ், டிரக் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களில் ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம்(ஏபிஎஸ்) பொருத்துவது கட்டாயமாக்கப்பட உள்ளது.
உலகிலேயே சாலை விபத்துக்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதன்மையாக உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, இந்தியாவில் சாலை விபத்துக்களில் 1.42 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத்தொடர்ந்து, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழப்பு அதிகம்
இந்தியாவில் ஏற்படும் விபத்துக்களில் 30 சதவீதம் டிரக், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களால் ஏற்படுகின்றன. இதன்மூலம், ஏற்படும் உயிரிழப்புகளின் சதவீதமும் அதிகம். இதனால், ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டத்தை கனரக வர்த்தக வாகனங்களில் கட்டாயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வரும் ஏப்ரல் முதல்
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தயாரிக்கப்படும் அனைத்து கனரக வர்த்தக வாகனங்களில் இந்த ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக இருக்க வேண்டும். இதன்மூலம், கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவகாசம்
ஏபிஎஸ் பிரேக்கிங் அமைப்பை புதிய மாடல்களில் பொருத்துவதற்கு தயாரிப்பாளர்களுக்கு கால அவகாசம் அளிக்கும் விதத்தில் இந்த புதிய விதிமுறையை வரும் ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு கொண்டு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கார்களுக்கு இல்லை
அதுவரை ஏபிஎஸ் இல்லாத மாடல்களை விற்பனை செய்ய முடியும். அதேநேரத்தில் பயணிகள் வாகனங்கள் மற்றும் கார்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்குவது குறித்து இதுவரை எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்
அதிவேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் சக்கரங்கள் லாக் ஆகிவிடாமல் பிரேக் பவரை சீராக செலுத்தி வாகனத்தை நிறுத்தும் தொழில்நுட்பமே ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம். இதன்மூலம், வாகனங்கள் சறுக்கிச் செல்வதும், வீல்கள் லாக் ஆகிவிடுவதால் கவிழும் ஆபத்துக்களும் தவிர்க்கப்பட்டு குறிப்பிட்ட தூரத்தில் வாகனத்தை நிறுத்தும் அமைப்பாக செயல்படும்.


Click it and Unblock the Notifications








