ஏராளமான வசதிகளுடன் ஆடி க்ய3 காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்
ஏராளமான வசதிகளுடன் ஆடி க்யூ3 சொகுசு எஸ்யூவியின் புதிய வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது டாப் மாடலாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வசதிகளை அளிக்கும் விதத்தில் இந்த புதிய க்யூ3 எஸ்யூவி மாடலை ஆடி களமிறக்கி உள்ளது. இந்த புதிய மாடல் போட்டியாளர்களான பிஎம்டபிள்யூ எக்ஸ்1, விரைவில் வரும் பென்ஸ் ஜிஎல்ஏ மாடல்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும்.

மாடல்கள்
கடந்த 2012ம் ஆண்டில் ஆடி க்யூ3 எஸ்யூவி 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரியில் க்யூ3 எஸ்யூவியின் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் விற்பனைக்கு வந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் க்யூ3 எஸ்யூவியின் குறைவான விலை மாடல் களமிறக்கப்பட்டது. இந்த மாடலில் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சினுடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வந்தது. இந்த நிலையில், க்யூ3 எஸ்யூவியில் 4வது மாடலையும் ஆடி அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் க்யூ3 டைனமிக் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும்.

எஞ்சின்
இந்த க்யூ3 டைனமிக் மாடலில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் இருக்கிறது. இந்த எஞ்சின் 177 பிஎஸ் பவரையும், 380 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

டிரைவ் செலக்ட் ஆப்ஷன்
முதல்முறையாக ஆடி நிறுவனம் தனது டிரைவ் செலக்ட் தொழில்நுட்பத்தை இந்த புதிய மாடலில் அறிமுகம் செய்துள்ளது. எளிதாக விரும்பும் டிரைவிங் மோடுகளுக்கு செல்லும் வசதிதான் இது. கம்ஃபோர்ட், ஆட்டோ மற்றும் டைனமிக் ஆகிய மூன்று டிரைவிங் ஆப்ஷன்களை சாலைநிலைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம்.

அம்சங்கள்
வெப்ப தடுப்பு கண்ணாடிகள், ஸினான் ப்ளஸ் ஹெட்லைட், எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், டைனமிக் ஹெட்லைட் அட்ஜெஸ்ட்மென்ட் வசதி, முழுவதும் சில்வர் வேலைப்பாடுகளுடன் கிரில், அண்டர்பாடி கார்டுகள், 17 இஞ்ச் அலாய் வீல்கள், சில்வர், கருப்பு மற்றும் சாம்பல் ஆகிய மூன்று புதிய வண்ணங்கள் என ஏராளமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

பாதுகாப்பு
6 ஏர்பேக்குகள், பார்க்கிங் எய்ட் ப்ளஸ், தானியங்கி ஹெட்லைட் மற்றும் வைப்பர்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், 2 ஸோன் டீலக்ஸ் ஆட்டோமேட்டிக் ஏசி, டைனமிக் கம்ஃபோர்ட் சஸ்பென்ஷன் ஆகியவை முக்கியமானதாக கூறலாம்.

விலை
டாப் வேரியண்ட்டாக விற்பனை செய்யப்பட உள்ள இந்த புதிய ஆடி க்யூ3 மாடல் ரூ.38.40 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








