பென்ட்லி கிராண்ட் கன்வெர்ட்டிபிள்... பார்க்க பார்க்க பரவசம்!
லாஸ் ஏஞ்சல்ஸ் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ள புதிய பென்ட்லி கிராண்ட் கன்வெர்ட்டிபிள் காரின் படங்கள் மற்றும் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சொகுசு, நவீன அம்சங்களையும் தாங்கி வந்திருக்கும் இந்த புதிய கன்வெர்ட்டிபிள் கார் பென்ட்லி தொழிலாளர்களின் கடின உழைப்பிலும், கலைநயத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை வந்த கன்வெர்ட்டிபிள் கார்களில் மிக உன்னதமான மாடலாக இதனை பென்ட்லி நிறுவனம் மார் தட்டுகிறது.
இதுகுறித்து பென்ட்லி நிறுவனத்தின் தலைவர் வோல்ஃப்கேங் துர்ஹெய்மர் குறிப்பிடுகையில்," ஓர் பிரத்யேகமான கன்வெர்ட்டிபிள் கிராண்ட் டூரர் கார் மாடலை உருவாக்கும் திறன் எங்களிடம் இருப்பதை இந்த கார் எடுத்தியம்பும். முல்சான் கார் தரும் சொகுசு அனுபவத்தையும், கூரை இல்லாமல் பயணம் செய்யும்போது கிடைக்கும் பேரின்பத்தையும் ஒருங்கே வழங்குவதாக இந்த காரை கூறலாம்.

புதுப்புது வழிகளில் சொகுசு மற்றும் செயல்திறனையும் இணைந்து வழங்குவதற்கான முயற்சிகளை தொடர்ந்து செயல்படுத்துவோம். இந்த புதிய கார் மாடலுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கிறோம். இந்த கார் சாலைகளுக்கு வரும்போது, நிச்சயம் ஒரு பிரத்யேகமான மாடலாகவும், கார் சேகரிப்பாளர்களுக்கான வரையறுக்கப்பட்ட பதிப்பாகவும் இருக்கும்," என்று வோல்ஃப்கேங் கூறினார்.

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் இரட்டை டர்போசார்ஜர் கொண்ட வி8 எஞ்சின் 580 பிஎச்பி பவரையும், 1,100 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் கியர்பாக்ஸ் குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. பென்ட்லி கிராண்ட் கன்வெர்ட்டிபிள் கார் கான்செப்ட் மாடலுக்கு தனித்துவமான நீல வண்ணமும், க்ரீம் வண்ணத்திலான லெதர் அப்ஹோல்ஸ்டரியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மரவேலைப்பாடுகளும் காரின் மதிப்பை கூட்டுகிறது.


Click it and Unblock the Notifications








