டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் தரப்போகும் பிஎம்டபிள்யூ ஐ8!!
அடுத்த தலைமுறை தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் தர இருக்கிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வரும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்த இருக்கும் மாடல்களில் ஒன்றாக இதனை கூறலாம்.
டிசைன், தொழில்நுட்பம் என இரண்டிலும் பல சிறப்பம்சங்களை பெற்றிருக்கும் இந்த கார் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டவுடனேயே 10,000 பேர் முன்பதிவு செய்தனர். அடுத்த ஓர் ஆண்டுக்கு தயாரிக்கப்பட உள்ள அனைத்துகார்களுக்கும் முன்பதிவு முடிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இணைந்து செயலாற்றும் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட இந்த புதிய ஸ்போர்ட்ஸ் காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்க்க தவறாவிடாதீர்கள். அப்படி பார்க்க செல்பவர்கள் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டிருக்கும் சில முக்கியத் தகவல்களையும் பார்த்துச் சென்றால் சிறப்பாக இருக்கும்.

உறுதிமிக்க பாடி
இலகு எடை கொண்ட இந்த கார் கார்பன் ஃபைபர் பாகங்கள் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் கார் வெறும் 1,490 கிலோ எடை மட்டுமே கொண்டது. இதன்மூலம், அதிக எரிபொருள் சிக்கனம், சிறந்த பெர்ஃபார்மென்ஸை வழங்கும்.

எஞ்சின் & மின் மோட்டார்
ஹைபிரிட் தொழில்நுட்பம்தான் இந்த ஸ்போர்ட்ஸ் காரின் மிக முக்கியமான அம்சம். இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் எஞ்சின் உற்பத்தி செய்யும் ஆற்றல் பின்புற சக்கரங்களுக்கும், மின் மோட்டார் மூலம் உற்பத்தியாகும் ஆற்றல் முன்புற சக்கரங்களுக்கும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அமைப்பு மூலம் செலுத்தப்படுகிறது.

எஞ்சின் சக்தி
பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 228 எச்பி ஆற்றலையும், 320 என்எம் டார்க்கையும் அள்ளி வழங்கும். மின் மோட்டார் அதிகபட்சமாக 129 எச்பி ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும். பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் என இரண்டும் சேர்த்து ஒரே நேரத்தில் 357 எச்பி ஆற்றலை வெளிக்கொணரும் திறன் இந்த காருக்கு உண்டு.

ஆஹா ஓஹோ மைலேஜ்
இந்த ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரின் மைலேஜ்தான் போட்டியாளர்களை கதிகலங்க வைக்கிறது. ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இந்த கார் கணக்கீடுகளின்படி ஒரு லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆற்றலும், மைலேஜும் ஒருங்கே தர வல்ல இந்த அம்சம்தான் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்துள்ளது.

அதிகபட்ச வேகம்
மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லத்தக்க இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 4.4 வினாடிகளில் தாண்டிவிடும். இதன் சிறப்பான டார்க்கும், ஆற்றல் வெளிப்பாடும் இந்த வேகத்தை எட்டுவதற்கு உறுதி செய்கின்றன.

குறிப்பிடத்தக்க அம்சம்
இந்த காரில் பெட்ரோலையும், பேட்டரியில் சார்ஜையும் முழுமையாக நிரப்பிவிட்டால் 500 கிமீ வரை செல்லலாம். ஒரு ஸ்போர்ட்ஸ் காரில் இந்தளவு தூரம் செல்வதற்கான வாய்ப்பு கிடைப்பதும் குறிப்பிடத்தக்க அம்சம்.

விலை
காரில் அருகில் நின்று பார்க்கிறோம். அதிலிருக்கும் தொழில்நுட்பங்களை கண்டு வியக்கிறோம். ஒரு போட்டோவும் எடுக்கிறோம். அந்த போட்டோவுக்கு மதிப்பு சேர்ப்பதற்கு அந்த காரின் விலையையும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? ஆம். இந்த காரின் ஆரம்ப விலை 1.35 லட்சம் டாலர். இந்திய மதிப்பில் ரூ.85 லட்சம்.

இந்தியாவுக்கு...
இந்திய மார்க்கெட்டில் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தை இன்னமும் பக்குவப்படவில்லை என பெரும்பாலான கார் நிறுவனங்கள் கருதுகின்றன. எனவே, உடனடியாக ஐ வரிசையிலான இந்த ஹைபிரிட் கார்களை பிஎம்டபிள்யூ கொண்டு வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், தங்களது தொழில்நுட்ப வலிமையை உணர்த்தும் விதமாக இந்த காரை பார்வைக்கு வைக்க பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








