ஜூனில் கார் விற்பனை விர்ர்... தயாரிப்பாளர்களின் முகங்களில் நம்பிக்கை ஒளி
கடந்த மாதமும் கார் விற்பனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால், கார் தயாரிப்பாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கடந்த இரு ஆண்டுகளாக நிலவி வந்த மந்தநிலை மாறி கடந்த இரு மாதங்களாக கார் விற்பனையில் ஏற்றம் காணப்படுகிறது.
மாருதி, ஹூண்டாய், ஹோண்டா உள்ளிட்ட முன்னணி கார் நிறுவனங்கள் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதியின் விற்பனை கடந்த ஜூனில் 31 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. இது அந்த நிறுவனத்துக்கு பெரும் உற்சாகத்தை தந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 77,002 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த மாருதி நிறுவனம் கடந்த மாதம் 1,00,964 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதேபோன்று, ஏற்றுமதியிலும் நல்ல முன்னேற்றத்தை மாருதி பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூனில் 7,453 கார்களை ஏற்றுமதி செய்திருந்த மாருதி கடந்த மாதம் 11,809 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதனை ஒப்பிடும்போது 58 சதவீதம் ஏற்றுமதியில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதேபோன்று, இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் 10 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. எக்ஸ்சென்ட், கிராண்ட் ஐ10 உள்ளிட்ட புதிய கார் மாடல்கள் ஹூண்டாய் விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளன. அடுத்து ஹோண்டா கார் நிறுவனம் 75 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உற்பத்தி வரிச்சலுகைக்கான காலக்கெடு ஜூன் மாதத்துடன் முடிவடைந்துவிடும் என்ற அச்சமும், கார் தயாரிப்பாளர்களின் அதிரடி தள்ளுபடி சலுகைகளும் கார் விற்பனை ஜூன் மாதத்தில் அதிகரித்ததற்கான காரணங்களாக கூறப்படுகின்றன.
மேலும், விரைவில் பண்டிகை காலம் துவங்குவதையடுத்து, கார் விற்பனையில் தொடர்ந்து முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications