ஸ்பேர்பார்ட்ஸ் விற்பனையில் அடாவடி... 14 கார் நிறுவனங்களுக்கு ரூ.2,544.65 கோடி அபராதம்
வர்த்தக கோட்பாடுகளை மீறியதாக 14 கார் நிறுவனங்களுக்கு மத்திய சந்தை போட்டி கண்காணிப்பு ஆணையம் (சிசிஐ) ரூ.2,544.65 கோடியை அபாரதமாக விதித்துள்ளது.
வெளிச்சந்தையில் உதிரிபாகங்களை கிடைக்க விடாமல் கார் நிறுவனங்கள் வர்த்தக விதிகளை மீறி செயல்பட்டதை சிசிஐ அமைப்பு கண்டுபிடித்தது. இதுதொடர்பாக, ஏராளமான புகார்களும் வந்தன. இதுதொடர்பாக நடத்திய விரிவான விசாரணையில் அங்கீகரிக்கப்படாத சர்வீஸ் மையங்களையும், மெக்கானிக்குகளையும் சந்தையில் நுழைய விடாமல் கார் நிறுவனங்கள் தடுக்கும் முயற்சிகளை செய்தது தெரிய வந்தது.

மேலும், டீலர்கள் வழியாக கொள்ளை லாபம் வைத்து உதிரிபாகங்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனால், கார் உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து வர்த்தக விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி கடந்த 2012ம் ஆண்டு 17 கார் நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், தொடர்ந்து நடந்த விசாரணையில் 14 கார் நிறுவனங்கள் விதிமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 14 கார் நிறுவனங்களுக்கு சிசிஐ அமைப்பு ரூ.2,544.65 கோடியை அபராதமாக விதித்துள்ளது.
மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், ஃபோர்டு இந்தியா, ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா(செவர்லே), ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், மஹிந்திரா, மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா, நிசான் மோட்டார்ஸ், ஸ்கோடா ஆட்டோ இந்தியா, டொயோட்டா கிர்லோஸ்கர், ஃபோக்ஸ்வேகன், ஃபியட் இந்தியா, பிஎம்டபிள்யூ, ஹோண்டா சியல் கார்ஸ் இந்தியா ஆகிய 14 கார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கார் நிறுவனங்களின் மொத்த ஆண்டு வருவாயில் 2 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வெளிச்சந்தையில் இனி சரியான விலையில் உதிரிபாகங்களை கார் உரிமையாளர்கள் வாங்குவதற்கு வழி வகை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








