போட்டியாளர்களை தோற்கடிக்கும் டட்சன் காரின் சிறப்பம்சங்கள் விபரம்!
கடந்த வாரம் டட்சன் கோ காரில் இருக்கும் பாதகமான அம்சங்கள் குறித்த செய்தியை வெளியிட்டிருந்தோம். இந்தநிலையில், டட்சன் கோ காரில் இருக்கும் சில முக்கிய சிறப்பம்சங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
சென்னையில் உற்பத்தியும், டீலர்களில் முன்பதிவும் துவங்கிவிட்ட டட்சன் கோ கார் இன்னும் ஓரிரு வாரங்களில் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், இந்த காரின் சாதக அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

இடவசதி
மாருதி ஆல்ட்டோ மற்றும் ஹூண்டாய் இயான் கார்களின் விலையில் வர இருக்கும் இந்த புதிய காரின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இடவசதியை கூறலாம். நிசான் மைக்ரா அடிப்படையிலான இந்த கார் ரூ.4 லட்சத்திற்குள் வந்தாலும், மாருதி வேகன் ஆர் மற்றும் ஹூண்டாய் ஐ10 கார்களைவிட சிறப்பான இடவசதியை கொண்டிருக்கும். இந்த விலை பட்டியலில் இருக்கும் கார்களில் மிகச்சிறந்த இடவசதி கொண்ட காராகவும் இதனை அடித்து கூற முடியும்.

எஞ்சின்
இதன் ரகத்தில் குறிப்பிடப்படும் மாருதி ஆல்ட்டோ மற்றும் ஹூண்டாய் இயான் கார்களில் 800சிசி எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. சில மாடல்கள் 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், டட்சன் கோ காரில் 67 பிஎச்பி ஆற்றலையும், 104 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. எனவே, போட்டியாளர்களைவிட சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் கொண்ட காராக இருக்கும்.

இருக்கை அமைப்பு
முன்புறத்தில் டிரைவர் மற்றும் சக பயணிக்கான இருக்கைகளுக்கு இடையில் சிறிய இணைப்பு போன்ற இருக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கானதாக கூறப்பட்டாலும், இதில் பாதுகாப்பு பிரச்னை இருக்கிறது. இருந்தாலும், இந்த கூடுதல் இருக்கை சற்று கூடுதல் வசதியை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சிறப்பு வசதிகள்
டட்சன் கோ கார் பட்ஜெட் காராக குறிப்பிடப்பட்டாலும், ஸ்பீடு சென்சிங் வைப்பர் மற்றும் ஃபாலோ மீ ஹெட்லைட்டுகளை கொடுத்து இந்த விலை பட்டியல் கொண்ட கார்களில் சிறப்பான வசதிகள் கொண்ட காராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்
இந்த காரில் உடனடி எரிபொருள் செலவீனத்தை தெரியப்படுத்தும் வசதி கொண்ட டிஜிட்டல் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு இது கூடுதல் அந்தஸ்தை கொடுக்கும்.

பூட்ரூம்
இந்த காரில் 265 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் கொடுக்கப்பட்டுள்ளது. இது போட்டியாளர்களைவிட பொருட்களை அதிகம் வைப்பதற்கான மிகச்சிறப்பான இடவசதி கொண்டதாக கூறலாம்.

வாரண்டி
மாருதி, ஹூண்டாயின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த பட்ஜெட் கார் மார்க்கெட்டில் பெயர், ஊர் தெரியாத பிராண்டாக டட்சன் பிராண்டை முன்னிலைப்படுத்த நிசான் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதனால், இந்த காருக்கு 2 ஆண்டுகளுக்கான வாரண்டியை டட்சன் வழங்க இருக்கிறது. கிலோமீட்டர் கணக்கில் கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கார் ரகத்திலேயே சிறப்பான வாரண்டி திட்டம் கொண்டதாக கோ காரை கூறலாம்.


Click it and Unblock the Notifications








