சொகுசு கார்களுக்கு இருக்கும் டிமான்ட்டை கண்டு வியக்கேன்!
இந்தியாவில் சொகுசு கார்களுக்கான டிமான்ட் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. இதற்கு சான்றாக, கடந்த ஒரு சில ஆண்டுகளில் குறிப்பிட்ட சொகுசு கார்களுக்கான வரவேற்பு சான்றாக அமைகிறது.
வாங்கும் சக்தி அதிகரிப்பு, கார்கள் குறித்து வாடிக்கையாளர்களிடம் இருக்கும் அதிக விழிப்புணர்ச்சி, சீர்தூக்கி பார்க்கும் திறனில் திறமையாகி இருக்கும் வாடிக்கையாளர்கள் ஆகியவை இந்திய ஆட்டோமொபைல் துறையை புதிய உச்சத்திற்கு அழைத்து சென்று கொண்டிருக்கிறது.
இதன்மூலம், உலக ஆட்டோமொபைல் துறை கவனத்தை இந்தியா ஈர்த்துள்ளது. போட்டி அதிகமாகி வருவதும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மாடல்களையும், தொழில்நுட்பங்களையும் பெறுவதற்கு அடிகோலும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து முன்பதிவில் அசத்திய கார் மாடல்கள் சிலவற்றை ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்
உலக அளவில் வாடிக்கையாளர்களின் மிக விருப்பமான சொகுசு கார் மாடல்களில் ஒன்றான மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. ரூ.1.57 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த புதிய சொகுசு காருக்கான அறிமுக விழா சம்பிரதாயமாக நடந்து முடிந்தது. ஏனெனில், முதல் லாட்டில் விற்பனை செய்யப்பட இருந்த 125 கார்களுக்கான முன்பதிவு விழாவிற்கு முன்னரே முடிந்துவிட்டது.

பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் கார்
பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காருக்கு ஐரோப்பிய மார்க்கெட்டில் ஓர் ஆண்டுக்கான முன்பதிவு முடிந்துவிட்டது. இந்த காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்து இந்திய வாடிக்கையாளர்களின் நாடித்துடிப்பை பார்த்துவிடலாம் என்று முடிவு செய்துள்ளது பிஎம்டபிள்யூ. மேலும், இந்தியாவில் 6 ஐ8 கார்களை விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளது. ஆனால், அந்த 6 கார்களையும் வாங்குவதற்கு இப்போதே விருப்பம் தெரிவித்து வாடிக்கையாளர்கள் க்யூ கட்டத் தொடங்கிவிட்டனராம்.

பென்ஸ் ஏ கிளாஸ்
கடந்த ஆண்டு மே மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பென்ஸ் ஏ கிளாஸ் கார் சொகுசு கார் மார்க்கெட்டில் கிடைக்கும் குறைந்த விலை மாடல்களில் ஒன்று. தோற்றத்தில் மிகச்சிறப்பாக இருந்ததால் வாடிக்கையாளர்களை எளிதாக கவர்ந்தது. முதல் லாட்டில் விற்பனை செய்யப்பட இருந்த 400 கார்களும் ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்தன. மேலும், இந்த கார்களுக்கு அதிக தேவை இருப்பதை கருதி, கூடுதல் கார்களை அனுப்புமாறு தலைமையகத்திற்கு பென்ஸ் இந்தியா நிறுவனம் கோரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆடி க்யூ3
கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆடி க்யூ3 எஸ்யூவிக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. வெகு சீக்கிரமாக ஆடி நம்பர்1 இடத்துக்கு முன்னேறுவதற்கு கைகொடுத்த மாடல் இது. முதல் லாட்டில் விற்பனை செய்யப்பட இருந்த 400 கார்களுக்கும் 5 நாட்களில் முன்பதிவு முடிந்துபோனது. இதேபோன்று, கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட குறைந்த விலை க்யூ3 ஸ்போர்ட் மாடல் அறிமுகத்தினத்தன்று மட்டும் 125 முன்பதிவுகளை பெற்று அசத்தியது.

லேண்ட்ரோவர் எவோக்
கடந்த 2011ம் ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வந்த லேண்ட்ரோவர் எவோக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னரே முதல் லாட்டில் விற்பனை செய்யப்பட இருந்த கார்கள் அனைத்திற்கும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. இதுவும் ஒரு பெரிய விற்பனை சாதனையாக பார்க்கப்படுகிறது.

மாருதி ஸ்விஃப்ட்
இது சொகுசு கார் மார்க்கெட்டில் சேராவிட்டாலும், முன்பதிவில் ஆட்டோமொபைல் துறையை வியக்க வைத்த மாடல். இதுவரை இந்திய கார் மார்க்கெட் வரலாற்றில் அதிக முன்பதிவுகளை பெற்ற மாடலாக மாருதி ஸ்விஃப்ட்டை கூறலாம். கடந்த 2011ல் விற்பனைக்கு வந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் முன்பதிவு 1.08 லட்சம் வரை சென்றது. அதைத்தொடர்ந்து, 2012ம் ஆண்டில் மாருதி ஆலையில் ஏற்பட்ட வன்முறை, கலவரம் காரணமாக உற்பத்தி முடங்கியதால், மீண்டும் முன்பதிவு 1.25 லட்சம் வரை உயர்ந்தது நினைவிருக்கலாம்.

மாருதி டிசையர்
மாருதி ஸ்விஃப்ட் போன்றே கடந்த 2012ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட காம்பெக்ட் டிசையர் காருக்கும் அதிக வரவேற்பு கிடைத்தது. 65,000 முன்பதிவுகள் வரை சென்றது. தற்போது ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்கள்தான் தம்தம் மார்க்கெட்டில் விற்பனையில் முன்னணியில் இருந்து வருகின்றன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்
காம்பெக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவிக்கு கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 66,000 முன்பதிவுகளை பெற்று ஃபோர்டு நிறுவனத்தை புதிய உச்சத்தை தொட வைத்துள்ளது. தற்போது உற்பத்தி நெருக்கடி காரணமாக இந்த காம்பெக்ட் எஸ்யூவிக்கான முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








