அம்பாசடர் டாக்சி இடத்தை லீனியாவை வைத்து பிடிக்க ஃபியட் தீவிரம்!
கோல்கட்டாவின் டாக்சி மார்க்கெட்டில் ஃபியட் லீனியா கார்கள் களமிறங்குகின்றன.
கோல்கட்டா நகரின் டாக்சி மார்க்கெட்டில் அம்பாசடர் கார்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த நிலையில், அம்பாசடர் காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து, அந்த மார்க்கெட்டை பிடிக்க ஃபியட் நிறுவனம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் லீனியா காரின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது. எனவே, விற்பனையை அதிகரிக்கும் வழியாக டாக்சி மார்க்கெட் மீது ஃபியட் கிறைஸ்லர் இந்தியா நிறுவனம் கண் வைத்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் நாகேஷ் பசவனஹள்ளி கூறுகையில்,' டெல்லி, மும்பையில் லீனியா கார்களை டாக்சி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறோம்.
இதைத்தொடர்ந்து, கோல்கட்டாவில் லீனியா கார்களை டாக்சி மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்கான அனுமதியை மேற்குவங்க அரசிடம் கோரியிருக்கிறோம். விரைவில் அனுமதி பெற்று விடுவோம். மேலும், ஏற்கனவே கோல்கட்டாவில் டாக்சி மார்க்கெட்டிற்கான லீனியா செடான் கார்களின் விற்பனையை துவங்கிவிட்டோம்," என்று கூறினார்.
டெல்லி, மும்பை, கோல்கட்டாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் லீனியா டாக்சி மாடல்களை விற்பனை செய்ய ஃபியட் திட்டமிட்டுள்ளது. இதற்கான, முயற்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








