இந்தியாவிலிருந்து ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை ஏற்றுமதி செய்ய ஃபியட் திட்டம்!
அமெரிக்காவை சேர்ந்த ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை இந்தியாவில் அசெம்பிள் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஃபியட் - கிறைஸ்லர் குழுமம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஜீப் பிராண்டின் பிரிமியம் எஸ்யூவி மாடல்களாக செரோக்கீ மற்றும் ரேங்க்லர் ஆகியவை ஏற்கனவே இந்தியாவில் சோதனை நடத்தப்பட்டன.
ஆனால், மார்க்கெட் நிலவரம் சரியில்லாததாக கூறி, ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்வதை ஃபியட் தாமதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை இந்தியாவில் களமிறக்க ஃபியட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

முதல் மாடல்கள்
அடுத்த ஆண்டு ஜீப் பிராண்டின் செரோக்கீ மற்றும் ரேங்க்லர் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன. இவை முதலில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். இதைத்தொடர்ந்து, 2016ம் ஆண்டில் புதிய எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

முதல் அசெம்பிள் மாடல்
செரோக்கீ, ரேங்க்லர் எஸ்யூவிகளை தொடர்ந்து சி செக்மென்ட்டில் நிலைநிறுத்தப்பட உள்ள புதிய எஸ்யூவி மாடலை இந்தியாவில் அசெம்பிள் செய்ய ஃபியட் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய எஸ்யூவி மாடல் பெட்ரோல் மற்றும் டர்போ டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வரும். இது 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாவும் இருக்கும். இந்த புதிய எஸ்யூவி மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஹூண்டாய் சான்டா ஃபீ போன்ற எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

புதிய மாடல்
எம்-6 அல்லது 556 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய எஸ்யூவி மாடல் அடுத்த தலைமுறை பேட்ரியாட் அல்லது காம்பாஸ் மாடலாக இருக்கும் என ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது 5 சீட்டர் பிரிமியம் எஸ்யூவி மாடலாக இருக்கும்.

பிரத்யேக டீலர்கள்
ஜீப் பிராண்டு எஸ்யூவிகள் பிரத்யேக டீலர்ஷிப்புகள் வழியாக விற்பனை செய்யப்படும். ஃபியட் டீலர்ஷிப்புகளில் இவை விற்பனை செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அசெம்பிள்
புனே அருகே ரஞ்சன்கவுனில் உள்ள ஃபியட் ஆலையில் ஜீப் பிராண்டு எஸ்யூவிகள் அசெம்பிள் செய்யப்படும். இதற்காக, பிரத்யேக அசெம்பிள் லைனும் உருவாக்கப்பட உள்ளது. மேலும், ஃபியட் சப்ளையர்களிடமிருந்து உதிரிபாகங்களை கொள்முதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதோடு, வலது பக்க டிரைவிங் கொண்ட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மார்க்கெட்டுகளுக்கு புதிய எஸ்யூவியை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய ஃபியட் திட்டமிட்டுள்ளது.

முதலீடு
பிரிமியம் எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்காக அடுத்த இரு ஆண்டுகளில் ரூ.1,500 கோடி முதல் ரூ.2,500 கோடி வரை முதலீடு செய்ய ஃபியட்- கிறைஸ்லர் குழுமம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








