பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' பிரச்சாரம்: கார் நிறுவனங்கள் வரவேற்பு
இந்தியாவின் உற்பத்தி துறை வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 'மேக் இன் இந்தியா' என்ற புதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்துள்ளார். இந்தியாவில் பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதற்கும், அதனை வெளிநாடுகளிலும் எளிதாக விற்பனை செய்யும் வகையில் நடைமுறைகளை எளிதாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த புதிய 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு வெளிநாட்டு கார் மற்றும் பைக் நிறுவனங்களின் உயரதிகாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து கருத்துக்களையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் புதிய பிரச்சாரம்
மேக் இன் இந்தியா திட்டத்தின்படி இந்தியாவில் தொழில் துவங்குவதிலும், தொழில் செய்வதிலும் எந்த பிரச்னையும் இருக்காது. வர்த்தக கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் மிக எளிமையாக இருக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில், இந்தியாவில் தொழில்தவங்குவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் வெளிநாட்டு கார் மற்றும் மோட்டார்சைக்கிள் நிறுவனங்களின் இத்திட்டம் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்களை பார்க்கலாம்.

ஹூண்டாய்
பிரதமர் நரேந்திர மோடியின் 'மேக் இன் இந்தியா' பிரச்சாரத்தை முழு மனதோடு வரவேற்கிறோம் என்று ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிஎஸ்.சியோ தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து 100 நாடுகளுக்கு சர்வதேச தரத்தில் கார்களை தயார் செய்து ஏற்றுமதி செய்கிறோம். இந்திய மார்க்கெட்டிஸல் தொடர்ந்து முழு உத்வேகம் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம். மேலும், எதிர்காலத்தில் உலகின் ஆட்டோமொபைல் உற்பத்தி கேந்திரமாக இந்தியா மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதை நோக்கியே பயணிக்கிறோம்," என்று கூறியுள்ளார்.

மாருதி சுஸுகி
நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனிச்சி அயுகவா கூறுகையில்," இந்தியாவி்ல உற்பத்தி செலவீனம் கணிசமாக அதிகரித்து வருகிறது. வர்த்தகம் செய்வதற்கு இந்தியா எளிமையான நாடு அல்ல. அரசின் பல்வேறு விதிமுறைகள் மற்றும் கொள்கைகளில் மாற்றங்கள் செய்தால் இன்னும் நன்மை பயக்கும். தற்போது 'மேக் இன் இந்தியா' திட்டத்தின்மூலம் மாறுதல்கள் வந்தால் அது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது. உலகின் மிகப்பெரிய கார் சந்தையாக இந்தியா மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன," என்று கூறினார்.

ரெனோ
ரெனோ இந்தியா நிறுவனத்தின் தலைவர் சுமித் ஷானி கூறுகையில்," இந்தியாவின் உற்பத்தி துறைக்கு 'மேக் இன் இந்தியா' பிரச்சாரத் திட்டம் ஒரு உந்துதலை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தக கொள்கைகள் எளிமையாக்கப்படுவது மற்றும் மறுசீரமைப்பின் மூலம் அன்னிய முதலீட்டை பெருமளவு ஈர்க்க முடியும். நாட்டின் மொத்த உற்பத்தியில் ஆட்டோமொபைல் துறை கணிசமான பங்களிப்பை அளித்து வருகிறது. 'மேக் இன் இந்தியா' பிரச்சாரத்தின் மூலம் வளர்ச்சிப் பாதையில் இந்தியா செல்லும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஹோண்டா கார் இந்தியா தலைவர்
ஹோண்டா கார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஹிரொனோரி கனயாமா கூறுகையில்," இந்தியாவை நம்புவதால் இந்தியாவில் 'மேக் இன் இந்தியா' என்ற கொள்கையை மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறோம். இங்கு ஹோண்டா கார்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளதை அறிவோம். உற்பத்தி மற்றும் வர்த்தக ரீதியிலான சூழ்நிலைகள் இங்கு சிறப்பாகவே உள்ளது. மனித ஆற்றல், விற்பனைக்கான கட்டமைப்பு உள்ளிட்டவை மிகச்சிறப்பாக உள்ளன. இந்த புதிய கொள்கை மூலம் கார்களின் உற்பத்தியை 90 சதவீதம் வரை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வாய்ப்பு பெற முடியும்," என்று கூறியுள்ளார்.

ஹார்லி டேவிட்சன்
ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனூப் பிரகாஷ் கூறுகையில்," 2009ம் ஆண்டு இங்கு உற்பத்திப் பணிகளை துவங்கினோம். தற்போது இந்தியாவிலிருந்து ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு மோட்டார்சைக்கிள் ஏற்றுமதியை துவங்கியிருக்கிறோம். இளைய மற்றும் புதுமைகளை தரும் கூட்டணி நிறுவனங்களையும், சப்ளையர்களையும் இந்தியாவில் பெற்றிருக்கிறோம். தற்போது பிரதமர் மோடியின் புதிய திட்டமும் எங்களது வர்த்தகத்துக்கு உறுதுணையாக இருக்கும். மேலும், பல நிறுவனங்களின் கவனம் இந்தியாவை நோக்கி திரும்பும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








