2016ல் இந்தியாவில் மீண்டும் ஃபார்முலா - 1 கார் பந்தயம்!
வரும் 2016ம் ஆண்டு இந்தியாவில் மீண்டும் ஃபார்முலா- 1 கார் பந்தயம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
2011ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஃபார்முலா - 1 கார் பந்தயம் தொடரந்து மூன்று ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக நடந்தன. ஆனால், அதிக வரிவிதிப்பு மற்றும் அரசாங்கத்தின் விதிமுறைகள் ஒத்துவராததால், இந்தியாவில் ஃபார்முலா- 1 போட்டிகளை இனி நடத்த இயலாது என சர்வதேச ஃபார்முலா - 1 கார் பந்தய சம்மேளனம் அறிவித்தது.

இதையடுத்து, இந்த ஆண்டு போட்டிகள் நடைபெறவில்லை. இந்தநிலையில், இந்தியாவில் மீண்டும் ஃபார்முலா - 1 போட்டிகளை கொண்டு வருவதற்கான முயற்சிகளை ஜேபி ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், இந்திய ஃபார்முலா- 1 அமைப்பை சேர்ந்தவர்களும் துவங்கியுள்ளனர்.
சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த ஃபார்முலா - 1 போட்டிகளின்போது, ஃபார்முலா - 1 கார் பந்தய சம்மேளனத்தின் தலைவர் பெர்னி எக்லிஸ்டோனை, ஜேபி ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் மற்றும் இந்திய ஃபார்முலா - 1 பந்தய அமைப்பாளர்கள் சமீர் கவுர் தலைமையில் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் மீண்டும் ஃபார்முலா - 1 கார் பந்தயம் வருவது உறுதியாகியுள்ளது. அடுத்த ஆண்டுக்கான அட்டவணைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதால், வரும் 2016ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஃபார்முலா - 1 போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, முக்கிய ஃபார்முலா - 1 போட்டிகள் நடைபெறும் இடங்களை தவிர, புதிதாக சேர்க்கப்படும் நாடுகளில் சுழற்சி முறையில் ஃபார்முலா - 1 போட்டிகளை நடத்துவதற்கும் திட்டம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








