இந்திய மார்க்கெட்டை பிடிக்க செவர்லே பிராண்டில் 3 புதிய கார் மாடல்களை தயாரிக்கும் ஜிஎம்!
இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில், 3 புதிய கார்களை செவர்லே வடிவமைக்க ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டு உள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்வதேச சிஇஓ., மேரி பாரா மேற்பார்வையில் இந்த புதிய கார்கள் தயாரிக்கப்பட உள்ளதால், அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும், இந்தியாவில் உள்ள ஆலையின் உற்பத்தி திறனை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு புதிய கார்களை ஏற்றுமதி செய்யவும் ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்திய மார்க்கெட்டில் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பெற முடியாமல் தவித்து வரும் செவர்லே, புதிய கார்கள் மூலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட முடியும் என்றும் நம்புகிறது.
இந்தியா மட்டுமின்றி, பிரேசில், மெக்ஸிகோ, ரஷ்யா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் கார் மார்க்கெட்டுகளிலும் இந்த புதிய கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளது.

அம்பர் திட்டம்
இந்த புதிய கார் வடிவமைபப்பு திட்டத்துக்கு அம்பர் என ஜெனரல் மோட்டார்ஸ் பெயரிட்டு அழைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் புதிய பிளாட்ஃபார்மில் அந்த மூன்று கார்களும் வடிவமைக்கப்பட உள்ளன.

என்னென்ன வகை கார்கள்?
புதிய ஹேட்ச்பேக் கார், காம்பேக்ட் செடான் மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி ஆகிய கார் மாடல்கள் இந்த புதிய அம்பர் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும். இந்தியா மற்றும் பிரேசில் மார்க்கெட்டுகளில் இந்த புதிய கார்கள் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து, உலக அளவில் வளரும் மார்க்கெட்டுகளுக்கு இந்த புதிய மாடல்கள் செல்லும்.

விற்பனை இலக்கு
இந்தியாவில் இந்த புதிய கார் மாடல்கள் மூலம் புதிய விற்பனை இலக்கை அடைவதற்கு ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த புதிய கார்களை வைத்து உலக அளவில் ஒரு மில்லியன் கார்களை கூடுதலாக விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளது.

ஆனால்...
ஜெனரல் மோட்டார்ஸ் முதல் பெண் சிஇஓ.,வான மேரி பாராவின் நேரடி மேற்பார்வையில் அம்பர் திட்டத்தின் கீழ் இந்த புதிய கார் மாடல்கள் வடிவமைக்கப்பட உள்ளன. ஆனால், இந்த புதிய கார்கள் வரும் 2018ம் ஆண்டில்தான் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








